புதன், 17 பிப்ரவரி, 2010

புரவி பாளைய ஜமீனின் தற்போதைய நிலைக்கு காரணம் என்ன? -2

என் பாட்டனார் மருதாசலத்தின் தந்தை வீரப்பன் என்பவர் அந்த ஜமீந்தாரிடம் நோட்டக்காரராக இருந்து வந்தார். அதாவது `வீரராயப் பணம்` எனும் தங்க நாணயங்கள் சோதித்துப் பார்த்து நல்ல தரம் உள்ளவையா இல்லையா என்று பார்ப்பது. ஜமீந்தார் எனது பெரிய பாட்டனாராகிய வீரப்பனை முக்கியமான விஷயங்களுக்கு ஆலோசனை கேட்பார். இப்போதும் தம்மிடம் வரச் செய்து, எல்லா விவரங்களையும் அவரிடம் கூறினார். தாம் எவ்வளவுதான் சுக போகங்களுடன் வாழ்ந்தாலும், கோர்ட்டுக்குப் போய் கை கட்டி நின்று அவமானப்படுவதை விடச் சாவது மேலானது என்று தலை குனிந்தவாறு கம்மிய குரலில் சொன்னார்.
அப்போது நோட்டக்காரராகிய வீரப்பன் சொன்னார், ` நீங்கள் மனம் கலங்க வேண்டாம் - எனக்கு ஒன்று தோன்றுகிறது. நீங்களும் நானும் ஒரே நிறம், ஏறக்குறைய ஒரே  மாதிரி பருமனான உடம்பு, ஒரே மாதிரியான முகத் தோற்றம் - ஆகையால், உங்களுடைய தலைப்பாகை, கோட்டு, கைத்தடி, சால்வை, குதிரை பூட்டிய வண்டி எல்லாவற்றையும் எனக்குத் தாருங்கள் - நான் கோர்ட்டுக்குப் போகிறேன். நீங்கள் அரண்மனைக்குள்ளேயே இருங்கள். வெளியே வர வேண்டாம்.` என்று சொன்னார். ஜமீந்தார் ஒப்புக் கொண்டார்.
குறிப்பிட்ட நாள் காலையில் நோட்டக்கார வீரப்பன் புறப்பட்டார். எப்படி? தலையில் சால்வையை முக்காடு போட்டு, வெட்கம் அடைந்தவரைப் போலத் தலை குனிந்தபடியே சுமார் 10 மணிக்கு கோர்ட்டை அடைந்து வெளியே ஒரு மரத்தடியில் வண்டியில் அமர்ந்திருந்தார்.
கோர்ட்டில் அன்று பெருங்கூட்டம். ஜமீந்தாருக்கு தண்டனை வழங்குவதைக் காண வந்தவர்கள் ஏராளம்.
ஜமீந்தார் ( நோட்டக்காரர்) வண்டியிலிருந்து இறங்கி, முக்காடு போட்டபடியே கோர்ட்டுக்குள் நுழைந்து குற்றவாளிக் கூண்டில் நின்றார். எதிர் பக்கம் மரணமடைந்த கொத்த்னாரின் சகோதரர் நின்றிருந்தார்.
மாஜிஸ்டிரேட் வழக்குத் தொடுத்தவரைப் பார்த்து, ` நீர் என்ன சொல்கிறீர்? உம் எதிரில் நிற்கும் ஜமீந்தார் உமது தம்பியைக் கொன்றதை நீர் பார்த்தீரா? எப்படிக் கொன்றார்? விவரமாகச் சொல்ல வேண்டும்` என்றார்.
அந்த கொத்தனார் உடனே `ஆமாங்கோ, இதே ஜமீந்தார் என் தம்பியை மரத்தில் கட்டி வைத்துப் பெரிய கயிற்றால் அடித்தே கொன்றார். அதை நான் பார்த்துக் கத்தினேன்` என்றார்.
உடனே குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த ஜமீந்தார் சட்டெனத் தமது முக்காட்டை நீக்கி விட்டுத் தலை நிமிர்ந்து, `இந்தா, என்னைப் பார்த்துச் சொல்லும், கொத்தனாரே! நன்றாக நினைவுபடுத்திச் சொல்லும்` என்றார்.
அவரது முகத்தை நன்றாக உற்றுப் பார்த்த கொத்தனார், `சாமி, இவர் இல்லீங்கோ, இவர் கொல்லவில்லை.` என்று உரத்த குரலில் கூறினான்.
`வழக்குத் தொடுத்த கொத்தனார் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் கொடுத்திருப்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்` என்று தீர்ப்புக் கூறினார் மாஜிஸ்டிரேட்.
ஜமீந்தார் வேடத்திலிருந்த நோட்டக்காரர் வண்டியில் ஏறிப் புரவி பாளையம் வந்தார்.

கருத்துகள் இல்லை: