புதன், 17 பிப்ரவரி, 2010

புரவி பாளைய ஜமீனின் தற்போதைய நிலைக்கு காரணம் என்ன? -1

புரவி பாளையம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஒரு ஜமீன்.அங்கு வசித்து வந்த ஜமீந்தார் அரண்மனையில் சுவர் சிறிது பழுது ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக கொத்தனாரை வரவழைத்தார்.
கொத்தனார் அங்கு வேலை செய்யும்போது, அடுத்துள்ள அறையில் தங்க நாணயங்கள்  நிறைந்த செப்புக் குடங்கள் இருப்பதை அறிந்து சுவற்றில் துளை செய்து அடுத்த அறை சென்று ஒரு குடத்தை எடுத்துக் கொண்டார். சுவற்றில் மண்ணைப் பூசி முன் போலவே செய்து விட்டார். பின்பு ஜமீந்தாரிடம் சொல்லிவிட்டு தன் கூலிப் பணத்தையும் பெற்றுக் கொண்டு போய்விட்டார் கொத்தனார்.
அன்று மாலையில் ஜமீந்தார் தமது ஓய்வு நேரத்தில் பழுது பார்க்கப் பட்ட அறைக் கதவைத் திறந்து பார்த்தார். உள்ளே அடுத்த அறைப் பக்கத்துச் சுவரில் ஈரம் பட்டிருப்பதைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அடுத்த அறை சென்று கதவை திறந்து பார்த்தார்.
எட்டுக் குடங்களுக்கு பதிலாக ஏழு குடங்கள் இருந்தன.
ஜமீந்தார் ஒரு ஆளை அனுப்பிக் கொத்தனாரை விசாரித்த போது, அவர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தங்கக் குடத்தையும் திருப்பிக் கொடுத்தார்.
எனினும் அடங்காத கோபமடைந்த ஜமீந்தார் கொத்தனாரை ஒரு மரத்தில் கட்ட செய்து, மாடு கட்டும் கயிற்றை எடுத்துக் கொண்டு கண்மூடித்தனமாக  அடித்து நொறுக்கினார். கொத்தனாரின் தலை சாய்ந்தது. அவருடைய உறவினர்கள் உடலை எடுத்து செல்ல முடியாதபடி தடுத்து உடலை அங்கேயே புதைக்கச் செய்தார்.
இறந்து போன கொத்தனாரின் உறவினர்கள் போலிசாரிடம் புகார் செய்தனர். அவர்கள் ஜமீந்தாரை கைது செய்ய தயங்கினார்கள். ஆனால் வழக்கை உடுமலை சப் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
கோர்ட்டிலிருந்து ஜமீந்தாருக்கு சம்மன் வந்தது. அவர் அதிர்ச்சி அடைந்தார். துயரத்தால் துடித்தார், கோர்ட்டுக்குப் போவதை அவமானமாக கருதினார்.

கருத்துகள் இல்லை: