செவ்வாய், 8 செப்டம்பர், 2009

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை...


என் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சண்முகத்துக்கு டெக்ஸ்டூலில் ஒரு கிளார்க் வேலை கொடுக்கும்படி பாதரிடம் ஒரு சிபாரிசு கடிதம் கேட்டு வாங்கி கொடுத்தனுப்பினேன். சண்முகம் வேலையில் சேர்ந்தான்.
     பின்பு அவனுக்குத் திருமணம் செய்து வைத்தேன். 3 ஆண்டுகள் கழிந்தன. அவனது மாமனார் என்னையும் இலட்சுமியையும் இராமசாமி நகர் வீட்டிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டார். காரணம் சண்முகம் சின்னம்மா இலட்சுமியிடமும் குழந்தை தியாகராஜனிடமும் அதிக பாசத்துடன் நடந்து கொண்டான். பாலக்காடு சென்ற அவனுடைய மாமனார் எந்திரம் வாங்கி வந்து அவனுக்குக் கட்டினார்.
      ஒரு நாள் காலை சண்முகம் என்னருகில் வந்து தலை குனிந்தபடியே, `அப்பா, நாம் பிரிந்திருந்தால் நல்லது` என்றான்.
        `சரி, அப்படியே செய்வோம். நீ சந்தோஷமாக இருந்தால் போதும்` என்றேன்.
அன்று காலையிலேயே நான் காட்டூர் சென்று எனது முன்னாள் மாணவனைச் சந்தித்துப் பேசினேன். உடனே அவன் எனக்கு வீடு தருவதாகச் சொன்னான்.
       சண்முகம் மாலையில் கம்பெனியிலிருந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பே நாங்கள் குழந்தையுடன் சாமான்களை எடுத்துக் கொண்டு போய்விட்டோம்.
        பின்பு சுலோச்சனா - இராமசாமி திருமணம் நடந்தது. ஒரு ஆண்டு கழித்து சந்திரா - பரமசிவம் திருமணம் நடந்தது. 
        அந்த திருமணங்களுக்கு வாங்கிய கடன்களை, நான் பள்ளியை விட்டு விலகிய பின் கிடைத்த P.F. பணம் கொடுத்துத் தீர்த்தேன். மேலும் என் தகப்பனாருடைய கடனையும் தீர்த்தேன். மீதி ரூ.1000 கொடுத்து, சோமு கவுண்டரிடம் 5 1/2 சென்ட் வீட்டுமனை வாங்கினேன்.
      அந்த இடத்தில் ஒரு வீடு கட்ட எண்ணினேன். என்னுடன் பள்ளியில் பணியாற்றிய நண்பர் திரு.கே.சுப்பிரமணியம் என்பவரிடம் பணம் கடனாகப் பெற்றேன். அந்தக் கடனை மூன்று ஆண்டுகளில் தீர்த்தேன்.
       சுலோ, சந்திரா திருமணங்களுக்கு உதவியவர்கள் என்  மாணவர்களான புரவிபாளையம் ஜமீந்தாரின் மக்கள் திரு.கிரிராஜ், திரு.வெற்றிவேல்.
            இத்தனை பேரையும் நான் மறப்பேனா?

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

தட்டுங்கள் திறக்கப்படும்.

             பூனாவிலிருந்தபோது, பார்வதி கோவிலில் சிவாஜி வைத்திருந்த வாள் (4½ அடி நீளம்) அங்கிருந்ததைப் பார்த்தேன். சற்றுத் தொலைவிலிருந்த ஆகாகான் மாளிகையைப் பார்த்தேன். அங்குதான் காந்தி சிறை வைக்கப்பட்டிருந்தார். அவருடன் இருந்த மனைவி கஸ்தூரிபாயையும் செயலாளர் மகாதேவ தேசாயையும் இழந்து துயரத்தில் ஆழ்ந்தார்.
பூனாவிலிருந்து திரும்பிய நான் வேலை தேட எண்ணினேன். ஒரு வாரம் கழிந்தது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் என்னை எதிர்பாராமல் சந்தித்து, மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் (தற்போது கோவை இரயில் நிலையத்திற்கு பின்புறம் இராயல் தியேட்டர் எதிரில் மேனிலைப் பள்ளியாக உள்ளது). ஒரு வேலை காலியாக இருப்பதாகச் சொல்லி, என்னைப் பாதர் அருள்சாமியிடம் அழைத்துச் சென்றார். என்னைப் பற்றிய விவரங்களைப் பாதரிடம் சொன்னார் நண்பர்.
       ”நீங்கள் பாகவதரிடம் இருந்தபோது அவர் கொடுத்த அளவு சம்பளம் என்னால் தரமுடியாது. ரூ.50 மட்டும் தருவேன்” என்றார்.
      ”இந்த சம்பளம் போதாது. நான் சென்னைக்கே போகிறேன்” என்றேன். ”நீங்கள் போகவேண்டாம். உங்களுக்குப் பணம் தேவைப்படும்போது என் அறைக்கு வந்து கதவைத் தட்டுங்கள் – உங்களுக்குப் பணம் தருகிறேன். நான் இந்தப் பள்ளியில் இருக்கும்வரை நீங்கள் போக வேண்டாம்” என்றார்.
      ”இயேசு கிறிஸ்து சொன்னார் – தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று – அதை நீங்கள் சொல்வதால், நான் பள்ளியை விட்டுப் போக மாட்டேன்” என்று சொன்னேன்.
       அவர் வியப்புடன் “உங்களுக்குப் பைபிள் தெரியுமா?” என்று கேட்டார். நான் சொன்னேன். – “பாதர் நான் இலண்டன் மிஷன் பள்ளியில் (தூய மைக்கேல் மேனிலைப் பள்ளிக்கு பின்புறம் சி.எஸ்.ஐ மேனிலை பள்ளி என்ற பெயரில் உள்ளது) படித்தபோது, பைபிளில் உள்ள St.Mathew, St.Luke படித்தேன். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்வு எழுதிப் பரிசுகளும் பெற்றேன்” என்றேன். “இதை ஏன் முதலில் சொல்லவில்லை?” என்று கேட்டார்.
”தன்னைத்தான் தாழ்த்திக் கொள்கிறவன் எவனும் உயர்த்தப்படுவான்” என்று நான் சொன்னபோது அவர் சிரித்தார்.
       சில மாதங்கள் கழிந்தன. 1945ல் ஒரு நாள் பாதர் என்னைத் தமது அறைக்கு மாலையில் வரச் சொன்னார். நான் சென்றேன்.
        ` நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். காட்டூரில் ஒரு சர்ச் இருக்கிறது. முன்புறம் ஒரு டவர் கட்ட வேண்டும். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. உங்கள் பாகவதரிடம் சொல்லி ஒரு பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்து தாருங்கள்` என்றார் பாதர்.
              பாகவதர் கச்சேரி சண்முகா தியேட்டரில் நடந்தது. எதிர்பார்த்ததற்கு மேல் வசூலாயிற்று. பாகவதருக்கு ரூ.2000/-மும் எனக்கு ரூ.500/- ம் கொடுத்தார் பாதர். இன்றும் ஜெயில் ரோட்டிலுள்ள சர்ச்சில் ஒரு டவரைக் காணலாம்.
               பத்து ஆண்டுகள் ஓடி விட்டன. நாலைந்து முறை பாதர் எனக்குப் பண உதவி செய்தார்.

ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு....

எனக்கு வயது பன்னிரண்டு இருக்கும். அப்போது என் பெரியப்பா, மாமா குடும்பங்கள் நீண்ட காலத்துக்குப் பிறகு ஆந்திராவிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது சில சடங்குகள் செய்வது வழக்கம்.
       உப்பிலிபாளையத்திலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு எல்லோரும் போனோம். நல்லெண்ணெய் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் தலை குனிந்தபடி நாங்களும் அவர்களும் இருவர் இருவராக முகம் பார்த்துக் கொண்டோம். என் பெரியப்பாவிடம் சிறிது தெலுங்கு கற்றுக் கொண்டேன். தினமும் வீட்டில் விருந்து சாப்பாடு. ஒரே கலகலப்பு. வீட்டில் முன்புறம் அகன்ற திண்ணையில் அமருவார்கள் (J.M.Sons Bakery) எதிரில்.இருந்தது வீடு.
          அவர்கள் எனக்கு காயத்ரி மந்திரமும் சந்தியா வந்தனமும் சொல்லித் தந்தார்கள். ஏழெட்டு ஆண்டுகள் கோவையில் தங்கிவிட்டுப் பிறகு ஆந்திராவிற்கே போய்விட்டார்கள். இன்று அவர்களுடைய சந்ததிகள் அங்கே இருக்கிறார்கள்.
       எங்கள் வீட்டுக்குச் சற்று தூரத்தில் ஒரு பங்களாவில் திரு.டால்பி எனும் ஆங்கிலேயர் இருந்தார். அவர் வீட்டுக்கு அடிக்கடி நான் செல்வதுண்டு. அவர் எனக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தார். பட்டாணிக் கடலையும் நிறையத் தந்தார்.

பாகவதரிடமிருந்து பிரிந்து வந்தேன்...

கோவைக்கு வந்துவிட்ட என்னை மீண்டும் அழைத்தார் பாகவதர். நாங்கள் பூனாவுக்குச் சென்று, ‘பிரபாத் ஸ்டுடியோவில் ‘ராஜ முக்தி’ என்ற படம் எடுத்தோம். படம் தோல்வியடைந்தது.
            பாகவதருக்கு ஒரு ஆள் தினமும் ஒரு பாட்டிலை மறைவாக எடுத்துச் செல்வதைக் கண்ட நான் மனம் மாறினேன். அவருடன் தங்கியிருக்க விரும்பவில்லை.ஒரு நாள் பாகவதர் என்னைப் பார்த்து “உங்கள் விரலில் இருந்த வைரமோதிரம் காணவில்லையே?” என்று கேட்டார்.
             ”நாம் திருச்சியில் இருந்தபோது உங்கள் தம்பி ஒரு திருமணத்துக்குப் போகவேண்டும் என்று சொல்லி மோதிரத்தைக் கேட்டார். நான் கொடுத்தேன்.
             தவிர ஒரு நாள் பி.ஏ. தேர்வு எழுத என்னிடமிருந்த ‘sheffers pen’ கேட்டார். (அதன் விலை ரூ.210. பிளாட்டினம் நிப் உடைய தங்க நிறமுள்ள பேனா) கொடுத்தேன்” என்று நான் சொன்னேன்.
            ”நீங்கள் ஏன் திரும்பக் கேட்டுப் பெறவில்லை?” என்று கேட்டார் பாகவதர். ”அவர் கொடுக்கவில்லை. நானும் கேட்கவில்லை” என்று சொன்னேன். “நீங்கள் ஒரு சாமியாராக இருக்க வேண்டியவர்” என்றார் பாகவதர். நான் சிரித்துக் கொண்டேன்.
            சிறிது நேரம் கழித்து, நான் “என் மனைவி என்னை ஊருக்கு வரும்படி கடிதம் எழுதியிருக்கிறாள். நாளைக்கு நான் புறப்பட வேண்டும்.” என்றேன். ”சரி, புறப்படுங்கள். ஆனால் நான் உங்களுக்கு ஏதும் கொடுக்கவில்லையே. ஒரு வீடு வாங்கித் தர நினைத்தேன்” என்றார். ”பரவாயில்லை. அந்த பாக்கியம் எனக்கு இருக்குமானால், நிச்சயமாக, ஒரு நாள் எனக்குக் கிடைக்கும். உங்களுடைய நட்பு இருந்தால் அது போதும்” என்றேன்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

சராசரங்கள் வரும் சுழன்றே...

ஒரு நாள், திருச்சி பங்களாவில் இருந்த போது - பாகவதர் என்னிடம் சொல்லிக் கொண்டு தனியாகவே காரில் புறப்பட்டார். வழியில் போலிஸ் அவரைக் கைது செய்தனர். ஊர் முழுவதும் பரபரப்பு. இலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இவரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.
            நான் பாகவதரைச் சப் ஜெயிலில் சந்தித்தேன். ஒரு வக்கீலை அழைத்து வரும்படி என்னிடம் சொன்னார். மனவுறுதியுடன் காணப்பட்டார். தினமும் வீட்டிலிருந்து அல்வாவும் இட்லியும் கொண்டு வரச் சொன்னார்.
             திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின்பு இலண்டனிலுள்ள பிரிவியூ கவுன்சிலுக்கு அப்பீல் செய்தோம். 1944ல் விடுதலையானார்கள். பாகவதரின் புகழ் மங்கியது. மக்களிடையே கர்நாடக இசையின் ரசிகத்தன்மை மாறிவிட்டது.
             நான் கோவைக்கு வந்து விட்டேன். அப்போது கோவை ராஜ வீதியில் உள்ள பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தவர் திருமதி.எம்.டுவெல்ஸ் (M.DWELLS). அவர் கோவை இரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு பங்களாவில் வசித்தார். (இப்போது, அங்கு Fire Service Station உள்ளது.)
            அவருக்குத் தமிழ் கற்றுத் தரும்படி ஒருவர் என்னிடம் சொன்னார். நான் ஓராண்டு அவருக்குத் தமிழ் கற்பித்தேன். தமிழ் பேசுவதற்கும் கற்றுக் கொண்டார்.
            கோவைக்கு வந்துவிட்ட என்னை மீண்டும் அழைத்தார் பாகவதர். நாங்கள் பூனாவுக்குச் சென்று, `பிரபாத்` ஸ்டுடியோவில் `ராஜ முக்தி` என்ற படம் எடுத்தோம். படம் தோல்வி அடைந்தது.

புதன், 2 செப்டம்பர், 2009

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்பிரமணிய சுவாமி உனை மறந்தேன்...

          இரயிலில் அருகில் அமர்ந்த பாகவதரிடம், `திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையாருக்குக் கும்பாபிஷேகம் செய்தீங்களாமே! ஒரு குடம் பாலை அந்தக் கல்லின் மீது ஊற்றினீர்களாமே! அது முட்டாள்தனமில்லையா? வாசல் படியில் நாம் காலால் மிதிக்கிற கல்லைத் தூக்கி வைத்து அதைக் கடவுள் என்று சொல்வது மடத்தனம் இல்லையா?` என்றார் பெரியார்.
            `இல்லை. அது வாசப்படியில் கிடக்கும்போது, வெறும் கல்லாகவே நினைக்கிறோம். அதேக் கல்லையே கோவிலில் வைத்துக் கடவுளாக எண்ணி வணங்குகிறோம். எல்லாம் மனம்தான் காரணம்.
             இன்னொன்று சொல்கிறேன் - என் அருகில் என் மனைவியும் தங்கையும் நிற்கிறார்கள். - இருவரும் பெண்கள் - மனைவியைத் தங்கையாகவோ, தங்கையை மனைவியாகவோ நினைப்பதில்லை. அதைப் போலத்தான் கல்லை நாம் நினைப்பதைப் பொருத்தது.` என்று விளக்கினார் பாகவதர்.
            எதிர் சீட்டில் உள்ளவர்கள் `சபாஷ் பாகவதர்!` என்று சொல்லி சிரித்தார்கள். `இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது` என்றார் பெரியார். உடனே பாகவதர் வாதம் பிடிவாதமானால் விளக்கி பய்னில்லை என்று உணர்ந்து என்னைப் பார்த்து சைகை செய்தார். அதைப் புரிந்து கொண்ட நான் செக்ரட்டரியிடம் மெல்ல சொல்லி, பெட்டி படுக்கைகளை அடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்கு எடுத்துப் போகச் செய்தேன்.
           `ஐயா, எங்கள் சீட் அடுத்த கம்பார்ட்மெண்டில் உள்ளது. எனக்கு விடை கொடுங்கள்` என்றார் பாகவதர்.
         `பாகவதர், போய் வாங்கோ. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்` என்றார் பெரியார்.
          

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?

       கோவை செண்ட்ரல் ஸ்டுடியோவில் `சிவகவி` படம் முடிந்தது. `ஹரிதாஸ்` படம் தொடங்கிய போது, பாகவதரின் புகழ் தமிழ் நாடு முழுவதும் பரவியது. - காரணம் - அவரது அழகிய தோற்றமும், கந்தர்வ கான குரலும், மக்களை மயக்கியது.
        இராமனாதபுரத்தில் ஒரு பங்களாவில் தங்கியிருந்தோம். பட முதலாளியும் டைரக்டரும் பாகவதரிடம் மிக்க மரியாதை காட்டினார்கள். சென்னை H.M.V யில் பாகவதரது பாடல்கள் ஒரு கண்ணாடி அறையில் பதிவு செய்யப்பட்டன. நான் அருகிலிருந்து ரசித்தேன். அதனால் எனக்குக் கர்னாடக சங்கீதத்தில் பற்று ஏற்பட்டது.
      படம் முடியும் தறுவாயில் ஒரு நாள் நாங்கள் திருச்சிக்குப் புறப்பட்டோம். எங்கள் செக்ரட்டரி வெங்கட்ராமய்யர் கோவை ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் டிக்கெட் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.
      மாலை 6.30 மணிக்குப் புளூமெளண்ட்டன் எக்ஸ்பிரஸ் வந்தது. சிறிது நேரத்தில் இரயில் கிளம்பும் சமயம் கார்டு விசில் ஊதி, பச்சைக் கொடியைக் காட்டினார். இரயில் நகர்ந்தது. இதைக் கண்ட எங்கள் செக்ரட்டரி ஓடிப் போய் கார்டைப் பார்த்து, `சார், பாகவதர் வ்ருகிறார். கொஞ்சம் நிறுத்த முடியுமா` எனக் கேட்டார். கார்டு இரயிலை நிறுத்தி விட்டார். அத்தகைய செயல் இனி எந்தக் காலத்திலும், யாருக்காகவும் நடைபெறாது என எண்ணுகின்றேன். அந்த கார்டுக்கு பிற்காலத்தில் ஸ்டுடியோவில் ஒரு வேலை கொடுக்கச் செய்தார்.
           ஒரு நாள் நாங்கள் திருச்சிக்கு கிளம்பினோம். இரயில் ஈரோடு சந்திப்பில் நின்றது. செக்ரட்டரி பெட்டி படுக்கைகளை எடுத்துச் சென்று ஒரு 2 ஆம் வகுப்பு பெட்டியில் வைத்தார். (3 ஆம் வகுப்பில் குஷன் சீட் கிடையாது). நாங்கள் அந்த பெட்டியில் ஏறினோம். ஒரு சீட்டில் பெரியார் ஈ.வெ.ரா அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் பாகவதர் வணக்கம் செய்தார். அவர் அருகில் நாங்கள் அமர்ந்தோம்.
`வாங்கோ, பாகவதர். உக்காருங்கோ. என்னவோ கேள்விப்பட்டேன். கொஞ்ச நாளைக்கு முன்னால் நீங்கள் ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்து விட்டீர்களே!
`அப்படி நான் என்ன செய்து விட்டேன்? சொல்லுங்கோ` என்றார் பாகவதர்.