நான் காட்டூரில் வசித்தபோது, என் பழைய நண்பர் காளிதாஸ் தேசாய் என்பவர் ஒரு நாள் என்னைச் சந்தித்தார்.
`சார், என் நண்பர் ஒருவருக்குத் தமிழ் கற்றுத் தர வேண்டும். நீங்கள் வருவீர்களா?` என்று கேட்டார்.
`யாருக்கு?`
` நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த சுபாஷ் சந்திர போஸின் தம்பி சைலேஷ் சந்திர போஸுக்கு கற்றுத் தரவேண்டும். அவர் தற்சமயம் இங்கே (கோவையில்) காளீஸ்வரா மில்லில் மானேஜராக இருக்கிறார். நாளைக்கு உங்களை அழைத்துப் போகிறேன்.` என்றார்.
சந்திப்பு
மறு நாள் போஸ் அவர்களை சந்தித்தேன் - அவர் ஆறு அடி உயரம் இருந்தார். நான் வியப்படைந்தேன். (காரணம் சுபாஷ் அவர்களின் உயரம் குறைவு.)
ஓராண்டு தமிழ் என்னிடம் படித்தார். ஒரு நாள், `மாஸ்டர், நான் 9 மொழிகள் கற்றிருக்கிறேன். உங்கள் தமிழ் மொழி கடினமான மொழி` என்றார்.
நான் அவரது சந்தேகத்தை போக்கினேன்.
`ட` என்ற எழுத்து ஒரு வார்த்தையில் தனித்து வரும்போது - `da` என்றும் `ட்` என்ற எழுத்துடன் வரும்போது, `ta` என்றும் உச்சரிக்க வேண்டும்.
உதாரணம் - `படம்` என்ற சொல்லில் வரும் `ட` எனும் எழுத்தை `da` என்றும், `பட்டம்` என்ற சொல்லில் வரும் `ட` எனும் எழுத்தை `ta` என்றும் உச்சரிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் பேசி விளக்கியபின் அவர் சந்தேகம் நீங்கியது.
ஒரு நாள் அவரிடம் ஒரு செய்தியைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். வழக்கம் போல் ஆங்கிலத்தில் கேட்டேன்.
`சார், தங்கள் மூத்த சகோதரர் சுபாஷ் சந்திர போஸின் மறைவு விமான விபத்தில் ஏற்பட்ட மரணமா? அல்லது வெள்ளையர்களின் சதியா?` என்று கேட்டேன்.
அவர் ஏதும் சொல்லாமல் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டுப் பின்பு சொன்னார், `சார், நாம் பாடம் படிக்கலாம்` என்றார்.
நான் அவரிடம் அக்கேள்வியை ஏன் கேட்டேன் என்று எண்ணி மிகவும் வருத்தப் பட்டேன்.
ஒரு நாள் என்னிடம் `மாஸ்டர், நான் பம்பாய் போய்விடலாம் என நினைக்கிறேன். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், இப்போது கேளுங்கள்` என்றார்.
அப்போது என் பிள்ளைகள் சிறுவர்களாகப் படித்துக் கொண்டிருந்தனர். அதனால் எனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
அவர் என்னிடம் தமது பம்பாய் முகவரியை கொடுத்து விட்டு அடுத்த மாதம் பம்பாய்க்குப் போய்விட்டார்.
அந்த முகவரியை நான் பயன்படுத்தவேயில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக