திருமதி நாயகம் காளிங்கராயர் அவர்களின் இறுதிக் காலம் நெருங்கியது. வேலூர் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. திரு.கிருஷ்ணராஜ் நாயகத்தின் உடலை எடுத்து காரில், நள்ளிரவில் ஊத்துக்குழி கொண்டு சென்றார்.
அன்று மாலை 5 மணிக்கு வழக்கம் போல், ரெட்பீல்ட்ஸிலுள்ள (Red Fields) திரு.என்.மகாலிங்கத்தின் பேத்தி கற்பகத்துக்கு டியூஷன் சொல்லித் தரப் போனேன். என்னைக் கண்டதும் கருணாம்பாள் ஓடி வந்து, ‘மாஸ்டர், நாயகம் போயிட்டாங்க’ என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தேன். வீடு திரும்பினேன்.
மறு நாள் காலை ஊத்துக்குழி சென்றேன். திரு.கிருஷ்ணராஜ் எழுந்து வந்து துயரம் நிரம்பிய உள்ளத்துடன் நின்றார். நான் கண்ணீர் ததும்ப அவரது கைகளைப் பற்றினேன். அவருக்கு ஆறுதல் சொல்ல வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. என் கண்ணீரைக் கண்டு, அவர் எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, “மாஸ்டர், 20 நாட்களுக்குப் பிறகு நம் கோவை பங்களாவுக்கு வாருங்கள். நாயகத்தின் உடலை உடனே எரித்து விட வேண்டியதாயிற்று” என்றார்.
நான் துயரச் சுமையோடு வீடு திரும்பினேன்.
திரு.கிருஷ்ணராஜ் சொன்னது போல கோவை பங்களாவுக்குப் போனேன். அவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் ஒரு கவர் கொடுத்தார். கவரில் ரூ.1200 இருந்தது. வியப்படைந்த நான் கவரை அவரிடம் திருப்பிக் கொடுக்க முயன்றபோது - அவர் தடுத்து சொன்னார், “மாஸ்டர், நாயகம் உயிர் பிரிவதற்கு முந்திய நாள் இந்த பணத்தைக் கவரில் வைத்து உங்களுக்கு கொடுக்கும்படி சொல்லியதால், தயவு செய்து இதை வாங்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் நாயகத்தின் ஆன்மா சாந்தியடையும்” என்றார்.
நான் கண்ணீர் கலங்கினேன். சிறிது நேரம் மெளனமாக இருந்தேன். பின்பு கவரைப் பெற்றுக் கொண்டு மானசீகமாக (மனதுக்குள்ளேயே) நன்றியைச் சொல்லிவிட்டு கனத்த இதயத்துடன் வீடு திரும்பினேன்.
அந்த கவரில் பணத்துடன் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதம் இன்றும் என்னிடம் இருக்கிறது.
இந்த உண்மை நிகழ்ச்சி ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி வள்ளல்’ என்று சொல்வது போல் வள்ளல்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையே எடுத்து காட்டுகிறது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத சோக நிகழ்ச்சிகள் இரண்டுதான். ஒன்று என் அன்பு மனைவி இலட்சுமியின் மறைவு. மற்றொன்று என் அன்பு மாணவி நாயகம் காளிங்கராயர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக