திருப்பூரில் என் மகன் தியாகராஜனைப் பார்த்து வர மனைவி இலட்சுமியுடன் போயிருந்தேன். இலட்சுமிக்கு உடல் நலம் சரியில்லை. இருமலால் அவதிப்பட்டாள். திருப்பூரிலேயே ஒரு மருத்துவரிடம் இலட்சுமியை அழைத்துப் போக எண்ணினேன். மருமகள் மணிமேகலை சிலரிடம் விசாரித்து மருத்துவர் பத்மனாபன் பெயரைச் சொன்னதும் அவரைப் பார்க்கச் சென்றோம்.
மருத்துவரின் மருத்துவமனையில் பலர் காத்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் பார்த்து விட்டு சென்ற பிறகு நாங்கள் உள்ளே சென்றோம்.
நான் மருத்துவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு இலட்சுமியை ஒரு நாற்காலியில் அமரச் செய்தேன். அப்போது திடீரென எதிர்பாராமல், மருத்துவர் பத்மனாபன் என் காலைத் தொட்டுக் கும்பிட்டார். நான் அதிர்ச்சியடைந்தேன்.
`சார், என்னைத் தெரியவில்லையா?` என்றார்.
`இல்லை`
`சார், நான் உங்கள் மாணவன். நீங்கள் பாடம் நடத்தும்போது அடிக்கடி கதைகள் சொல்வீர்கள்` என்று சொல்லிவிட்டு, தமது சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டுகள் ஐந்து எடுத்து என் கையைப் பற்றிக் கொடுத்துவிட்டு, `சார், என்னை ஆசிர்வதியுங்கள்` என்றார்.
நான் மருத்துவரை வாழ்த்தினேன். பிறகு, `டாக்டர், என் மனைவிக்கு இருமல் தொல்லை அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் பாருங்கள்` என்றேன்.
திரு.பத்மனாபன் என் மனைவியைச் சோதித்துவிட்டு, `சார், நான் மருந்து எழுதித் தருகிறேன். ஆனால் நீங்கள் திருப்பூரில் தங்க வேண்டாம். இங்கே, காற்றில் பஞ்சு கலந்துள்ளது. கோவைக்கே போய்விடுங்கள்` என்று சொல்லிவிட்டு, மேலும், `என் வீட்டுக்கு வந்து சாப்பிட வேண்டும்` என்று அழைத்தார்.
`டாக்டர், உங்கள் உதவியை மறக்க மாட்டேன். சாப்பாட்டுக்கு மற்றொரு சமயம் வருகிறேன். என் மனைவியின் உடல் நலம் முதலில் சரியாகட்டும். நான் கோவைக்கு செல்கிறேன்` என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக