நான் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றது 1969. மேலும் ஓராண்டு வேலை கொடுத்து உதவி செய்தார் பாதர் சின்னையன். ஆனால் பென்ஷன் 1968 வரையுள்ள காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ரூ.33/- அளித்தது அரசாங்கம். அதுவும் சென்னை ஏ.ஜி. ஆபிசில் (அக்கவுண்ட் ஜெனரல்) பாகவதரின் இரண்டாவது மாப்பிள்ளை திரு.சுந்தரமூர்த்தியை நேரில் சந்தித்து பேசிய பிறகு ஒரே வாரத்தில் எனக்கு பணம் கிடைத்தது.
இனி என் குடும்பத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
எங்களுக்கு (எனக்கும் இலட்சுமிக்கும்) நான்கு ஆண் குழந்தைகள் - தியாகராஜன், கலைச் செல்வன், இரவிச்சந்திரன், வீரராகவன் ( இந்த இடுகையை எழுதும் நான்).
இரண்டு பெண் குழந்தைகள் - பானுமதி, (மனு என்கிற) பத்மினி.
இவர்களில் கலைச் செல்வன் மட்டும் குடும்பத்தில் பற்றுதலோ, பாசமோ இல்லாமல் இருந்தான். சற்று முரட்டுத்தனமாகவும் இருந்ததால் அவனுடைய திருமணத்துக்குப் பின் குடும்பத்திலிருந்து பிரிந்தே போய்விட்டான்.
தியாகராஜனுக்குப் பழனியிலிருந்த திரு.சீனிவாசன் என்பவருடைய மகள் மணிமேகலையை திருமணம் செய்து வைத்தேன்.
கலைச்செல்வனுக்கு நெய்க்காரப்பட்டியிலுள்ள திரு. நடராஜன் என்பவருடைய மகள் கலாவதியை திருமணம் செய்து வைத்தேன்.
என் பெரிய பெண் பானுமதியைப் பெரிய நாய்க்கன் பாளையத்திலுள்ள திரு. ரங்கசாமி என்பவருடைய மகன் பாலசுப்பிரணியன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தேன்.
அடுத்து ஆத்தூரிலுள்ள திரு. பொன்னுசாமியும் மற்றும் சிலரும் என் மகள் பத்மினியைப் பெண் கேட்க வந்தார்கள்.
நான் சொன்னேன், `ஐயா, உங்கள் மகனுக்குப் பெண் தருகிறேன். ஆனால் நகை எதுவும் போட மாட்டேன். நகை வேண்டுமென்றால், கடைத்தெருவில் நகைக் கடை வைத்திருப்பவர்களிடம் பெண் கேளுங்கள். என்னால் எளிமையாக சிறப்பாக திருமணம் செய்து வைக்க முடியும். காப்பி சாப்பிடுங்கள்` என்றேன்.
அவர்கள் கோபித்துக் கொண்டு எழுந்து போய்விட்டார்கள்.
'God's will is mightier than human force. There is a divinity that shapes our ends.'
20 நாட்களுக்குப் பின் ஆத்தூர்காரர்கள் மீண்டும் என்னிடம் வந்து `ஐயா, நகை எதுவும் வேண்டாம். பெண் கொடுத்தால் போதும். திருமணம் ஆத்தூரில் வைத்துக் கொள்வோம்` என்றார்கள். நான் ஒப்புக் கொண்டேன்.
பெரிய மாப்பிள்ளை திரு.பாலசுப்ரமணியன் L.M.W -ல் வேலையில் இருந்தார். (தற்போது ஓய்வு பெற்று சொந்தமாக தொழில் செய்கிறார் - மூன்று மகன்கள் - இருவருக்கு திருமணமாகி விட்டது - வீரா)
இரண்டாவது மாப்பிள்ளை திரு.ஜெயபால் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்தார்.
இரவிச்சந்திரனுக்குத் திருமணம் செய்ய எண்ணிக் கொண்டிருந்த வேளையில் ஒரு தடங்கல் ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக