வழியில் பார்த்து தன்னுடன் காரில் அழைத்து சென்ற திரு.பி.எஸ்.ஜி.கோவிந்தசாமி அவர்களுடைய மில்லுக்குள் சென்று அவரது அறையில் அமர்ந்தோம். ` நீங்கள் சன்மார்க்க சங்கத்தில் வள்ளலாரைப் பற்றிப் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குள் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சிறப்பாக கூறியது என்ன? சொல்லுங்கள்` என்றார்.
நான் சொன்னேன் – “ஊழ்வினைதான் வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. முற்பிறவியில், கண்ணகியும் கோவலனும் பெரும் பாவங்களைச் செய்தார்கள். அவற்றின் விளைவுகளை அடுத்தப் பிறவியில் அனுபவித்தார்கள். ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்பது”.
(எனது கருத்து – சிலப்பதிகாரத்தில் மூன்று கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கிறது என்று உரைப்பார்கள். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். ஆனால் அரசியலில் பிழை செய்தோருக்கும் உரைசால் பத்தினியை ஏத்தும் உயர்ந்தோருக்கும் ஊழ்வினை ஒரு உரு எடுத்து வந்து உணர்த்தும் என்பதே அடிகளார் உரைக்கிறார் என்பதே எனது கருத்து. இதனால் கோவலன் – கண்ணகி திருமணத்தில் வாழ்த்துபவர்கள் நாவில் “காதல்ர் கை நெகிழாமல் தீது அறுக” என்ற சொற்கள் உருவில் வந்த்து ஊழ்வினை. “கோவலன் கள்வனாகில் கொன்று கொணர்க” என்ற நாவில் ஊழ்வினை உருத்து வந்தது என்பது தெள்ளென விளங்கும். எனது எளிய தமிழில் இலக்கியம் என்ற வலைப்பூவில் இதைப் பற்றி விரிவாக எழுத உள்ளேன். – வீரராகவன்).
நீங்கள் அடிக்கடி இங்கு வந்தால் நாம் பேசிக் கொண்டிருக்கலாம்” என்றார் கோவிந்தசாமி. பிறகு நான் எழுந்து புறப்பட எண்ணிய வேளையில், “கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு, தமது காசோலை ஒன்றில் ரூ2000 என்று எழுதி என்னிடம் தந்தார்.
நான் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். அவருக்கு நான் நன்றி சொன்னேன். – “ஐயா, குசேலருக்கு கண்ணபிரான் முகமறிந்து செய்த உதவியைப் போல செய்து விட்டீர்கள்” என்று சொல்லும்போது என் கண்கள் குளமாயின.
அதன்பிறகு நான் அவரிடம் சென்று இலக்கியங்களைப் பற்றிப் பேசினேன். நான் போனபோதெல்லாம் எனக்குப் பலமுறை ரூ.900/-, ரூ.600/-, ரூ.1000/- கொடுத்து என் வறுமை நிலையைப் போக்கிய அந்த வள்ளலை நான் மறக்க முடியுமா?
எனக்குப் பண உதவி செய்த வள்ளல்கள் –
(சிலரைப் பற்றி இங்கு குறிப்பிட்டாலும் ஒரு தனி பட்டியலே எழுதி வைத்திருக்கிறார் – நன்றி எனக் குறிப்பிட்டு. அதனை தன் சுயசரிதையின் இறுதியில் எழுதியிருப்பதால் நானும் இறுதியில் அந்த பட்டியலை வெளியிடுகின்றேன்.சிலரின் உதவிகளை வாய்மொழியாக நினைவு கூர்ந்து கூறியுள்ளார் – வீரராகவன்)
என் முன்னாள் மாணவர்கள் திரு.சோமு ( சோமு மெடிக்கல்ஸ், சாயிபாபா காலனி, கோவை), திரு. பி.சுப்பிரமணியம் ( சாந்தி கியர்ஸ்), திரு.சந்திர சேகரன் (ஸ்டேன்ஸ் மோட்டார்ஸ்), திரு.ஜெகதீசன் (சிட்கோ), (பக்கத்தின் அடிக்குறிப்பில் திரு.குப்புராஜூ (அசோகா பாக்கு), காட்டூர் சீனிவாசன், திரு.எஸ்.கோவிந்தராஜன் (ஆறு கவலை தோட்டம், குறிச்சிக்கோட்டை, உடுமலை) திரு.சம்பந்தம் (ஏர்கான்). எனக் குறிப்பிட்டுள்ளார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக