வீரராகவன் கல்லூரியில் சேர்க்க வேண்டிய காலம் வந்தது. எனது பரம்பரையில் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இல்லையென்ற குறையை போக்கிவிட்டான். எனக்கு முதலில் கல்லூரி பீஸ் கொடுத்து உதவியவர்கள் யார் யார்?
PRICOL நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு.என். தாமோதரன் என்பவர் இரண்டுமுறை கல்லூரி கட்டணம் கட்ட உதவினார். அதற்கு காரணமாயிருந்தவர் திரு.எல்.பக்தவத்சலம் என்பவர்.
நான் பள்ளியை விட்டு ஓய்வு பெற்றபின், எனது முன்னாள் மாணவர் ஊத்துக்குழி ஜமீந்தார் அவர்களின் மனைவி நாயகம் அவர்களுக்கு கம்பராமாயணம் கற்றுக் கொடுக்கச் சொன்னார்கள்.
சில மாதங்கள் இராமாயண வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அயோத்தி காண்டம், நகர் நீங்கு படலம் சொல்லிக் கொண்டிருந்தேன் ----
இராமனும் சீதையும் இலக்குவனும் அரண்மனையிலிருந்து காட்டுக்கு புறப்ப்டுகிறார்கள். நகர மக்கள் கண்ணீரை ஆறாகப் பெருக்கியவாறு அங்கு வந்து கூடினார்கள். மக்கள் மட்டுமா அழுதார்கள்?
கம்பர் சொன்னதைப் படியுங்கள்
ஆவும் அழுத அதன் கன்றழுத அன்றலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள்ளொழுகும்
காவும் அழுத களிறு அழுதகால் வயப்போர்
மாவும் அழுதன அம்மன்னனை மானவே
கையால் நிலந்தடவிக் கண்ணீரால் மெழுகுவார்
உய்யாள் பொற்கோசலையென்று ஒவாது வெய்துயிர்ப்பார்
ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ யென்பார்
நெய்யால் அழல் உற்றது உற்றார் அந்நீள் நகரார்.
இந்த இரு பாடல்களையும் சொல்லிவிட்டு விளக்கத்தையும் நான் சொல்லும்போது, நான் உணர்ச்சி வயப்பட்டு சற்று நிறுத்தினேன். அப்போது நாயகம் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
”அம்மா, உள்ளே போய் தண்ணீர் குடித்துவிட்டு வாருங்கள். இந்த காட்சி எவரையும் துயரத்தால் அழும்படி செய்யக்கூடியது. இனி நாளைக்குப் பாடம் தொடருவோம்” என்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக