உண்மையான ஜமீந்தார் கோபன்ன மன்றாடியார் நோட்டக்காரரின் வெற்றிச் செய்தியைக் கேட்டு, அரண்மனைக்குள்ளிருந்து வெளியே வந்து நோட்டக்கார வீரப்பனை நெஞ்சாரத் தழுவி, மாலை போட்டுப் பாராட்டினார். அவருக்கு விருந்து கொடுத்து கவுரவித்தார்.
அது மட்டுமல்ல, தமது நன்செய் நிலத்தில் 10 (பத்து) ஏக்கர் நிலத்தை நோட்டக்காரருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துப் பட்டாவும் செய்து வைத்தார். அந்த பட்டா அரண்மனையில் இருக்கிறது.
இத்தனை காலத்துக்குப் பிறகு, அந்த வீரப்பன் சந்ததியில் வந்துள்ள நான் ஜமீந்தாரிடமிருந்து கேட்டுப் பெறுவது எளிதான காரியமன்று.
என் தகப்பனார் (அவர் பெயரும் வீரப்பன்தான்) என்னிடம் சொல்லி, ஜமீந்தாரின் பேரன்கள் என்னிடம் தூய மைக்கேல் மேனிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் அந்த அன்பளிப்பு நிலத்தைப் பற்றிக் கேட்கும்படி சொன்னார்.
`எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலத்தைப் பற்றிக் கேட்க நான் விரும்பவில்லை. ஜமீந்தாரின் கவுரவத்தையும், உயிரையும் காத்த எனது முப்பாட்டனாருக்குக் கொடுக்கப்பட்ட நிலம் நமக்கு கிடைக்க வேண்டுமென்ற விதி இருக்குமானால் எப்போதாவது என் சந்ததியினருக்கு கிடைக்கும்.` என்று சொன்னேன்.
இன்று ஜமீந்தாரின் குடும்பம் அழிந்து விட்டது. அங்கே பல ஆண்டுகளாகத் தங்கியிருந்த ஒரு சாமியாரிடம் (கோடி சாமியார் என்று அழைப்பார்கள்) சொன்னார்கள் - `சாமி, நீங்கள் அரண்மனைக்கு வந்த பிறகுதான் இந்த அழிவு ஏற்பட்டது. காரணம் என்ன? என்று கேட்டார்கள்.
அவர் சொன்னார் - ` அம்மா, உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கள் உங்களுடைய முன்னோர்கள் செய்த பாவ வினைகள்` என்றார். தற்போது அந்த கோடி சாமியாரும் காலமாகி விட்டார்.
ஊத்துக்குளி ஜமீந்தாரின் குடும்பத்தில் நாயகம் புற்று நோயால் அவதிபட்டு இறந்தார். மகன் விவேகானந்தன் நடுரோட்டில் கோவையில் துப்பாக்கியால் சுடப்பட்டு மாண்டார். அவரை கூட இருந்தே நண்பனாய் இருந்து பின்னர் தவறான ஆசையால் மனம் மாறி சதி திட்டம் தீட்டி நண்பனையே கொலை செய்த வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி நிறுவனங்களின் அதிபர் வெங்கட்ராமன் செய்த குற்றம் உறுதிபடுத்தப்பட்டு சிறை தண்டனை பெற்று பின்னர் தானே தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன் செய்த வினைகளின் பயன்களை ஒருவன் பிற்காலத்தில் அனுபவித்தேயாக வேண்டும். அல்லது சந்ததியினர் அனுபவிக்க நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக