புதன், 18 மார்ச், 2009

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

என் மனைவி முத்தம்மாள் தோல் சம்பந்தமான ‘எக்ஸிமா’ நோயால் பீடிக்கப்பட்டாள். அவளுக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. பின்பு அவள் விருப்பப்படி பெங்களூரில் உள்ள பெற்றோரிடம் அனுப்பி வைத்தேன். அவளது பிள்ளைகள் சண்முகம், சுலோச்சனா, சந்திரா, என் பெற்றோர் எல்லாரும் நான் அனுப்பும் பணத்தைக் கொண்டு காட்டூரில் (தற்போது கோவை காந்திபுரத்திலுள்ள இராம் நகர் பகுதி) வாழ்ந்து வந்தனர்.
என் மனைவி முத்தம்மாளின் விருப்பத்திற்கிணங்க, என் தாயாரும், என் மனைவி முத்தம்மாளும் சேர்ந்து ஆலாங்கொம்பு சென்று, அங்கு வசிக்கும் சிற்ப வேலை செய்யும் விஸ்வநாதனுடைய மனைவியைச் சந்தித்தனர். அவர்களின் இரண்டாவது பெண் இலட்சுமியை எனக்கு இரண்டாம் தாரமாகத் தரும்படி கேட்டுச் சம்மதம் பெற்றனர். பின்பு எனக்கு கடிதம் எழுதினார்கள். நான் சரியென்று கடிதம் மனைவிக்கு எழுதினேன். திருமணம் பேருர் கோவிலில் வைத்துக் கொள்ளும்படியும், தேதி குறிப்பிட்டு எனக்கு எழுதும்படியும் நான் கடிதம் எழுதினேன்.
குறிப்பிட்ட நாளில் எனக்கும் இலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பாகவதரும் நண்பர்களும் வந்தார்கள். சில நாட்கள் நான் கோவையில் தங்கிவிட்டு சென்னைக்குத் திரும்பி விட்டேன்.
இலட்சுமியின் உயர்ந்த குணங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். பொறுமை, குடும்பத்தின் மீது பாசம். இந்த இரு குணங்களும் இலட்சுமியிடம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அது மட்டுமல்ல, எனக்கு தக்க சமயத்தில் நல்ல யோசனை கூறும் மந்திரியாகவும், எனக்கு பணிவிடை செய்வதில் அடிமையைப் போலவும், என் குற்றங்களை மன்னிப்பதில் பூமாதேவியாகவும் விளங்கினாள்.
என் பெற்றோரையும், முதல் மனைவியையும், மூன்று பிள்ளைகளையும் அன்புடன் கவனித்துக் கொண்ட அவளது பெருமையைப் பற்றிச் சொல்வது என்றால் - நான் கொடுத்து வைத்தவன் - அவ்வளவுதான்.

செவ்வாய், 17 மார்ச், 2009

”இராஜன் மகாராஜன்”

தியாகராஜ பாகவதர் காலையில் எழுந்த பின், பன்னீர் கலந்த தண்ணீரில் குளித்து விட்டு, பட்டாடைகள் அணிந்து, வைரக் கடுக்கண், கழுத்தில் வைரம் பதித்த சங்கிலி, நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு, கை விரல்களில் ஆறு வைர மோதிரங்கள், ஷர்ட் பொத்தான்களும், cufflinksகளும் வைரங்கள் மின்ன அணிந்து கொள்வார்.
இத்தனை அலங்காரங்களுக்குமேல் வாசனைத் திரவியங்கள் சட்டையில் தெளித்துக் கொண்டு, சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட நாற்காலியில் வெளியே முன்கூடத்தில் அமருவார். என்னையும் அருகில் அமரச் செய்வார். அவரது நண்பர்கள் மூவர் தினமும் அங்கே வந்து போவார்கள்.
எனக்கு ஒரு வைர மோதிரமும், பட்டு சட்டையும் ஜரிகை வேட்டியும் தந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் உண்ட உணவு வகைகள் --------
அவருக்குத் தங்கத் தட்டு. எனக்கும் அவரது நண்பர்களுக்கும் வாழையிலை.
மூன்று வகை இனிப்பு, மூன்று வகை சாதம், மூன்று வகைப் பொரியல், மூன்று வகைப் பாயாசம், மூன்று வகை ரசம், மூன்று வகைக் குழம்பு - தயிர் மட்டும் ஒரே வகை !
இவற்றைக் கண்ட நான் பிரமித்துப் போனேன். நான் தேவலோகத்தில் இருப்பதாக ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது.
இந்த இருபதாம் நூற்றாண்டில் எந்த ஒரு அரசனும் அனுபவிக்காத சுகபோகத்தை அனுபவித்தவர் பாகவதர் ஒருவரே.
ஒரு அதிசயமான செய்தி - நான் அவருடன் தங்கியிருந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறைகூட அவர் தமது தலைமுடியை வெட்டிக் கொண்டதில்லை - காரணம் தலைமயிர் வளர வளர நுனியில் தேய்ந்து விட்டது. அவர் காலத்தில் இளைஞர்கள் ‘பாகவதர் கிராப்’ என்று சொல்லி கொண்டு தாங்களும் வைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
அப்போது என் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு துயரச் செய்தியைப் பற்றி அடுத்த இடுகையில்.

செவ்வாய், 10 மார்ச், 2009

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ? - தியாகராஜ பாகவதர்

ஒரு நாள். ஆம், அந்த ஒரு நாள். நான் காட்டூரிலிருந்து காமாட்சியம்மன் கோவிலுக்குப் பெரியகடைவீதி வழியே போய்க்கொண்டிருந்தபோது, நகைக் கடையிலிருந்து வெளியே வந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார் திரு. மீனாட்சி சுந்தரம்.
“ஐயா, நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அதாவது, என் நண்பர் திரு. தியாகராஜ பாகவதருக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும். அவர் பங்களா இராமனாதபுரத்தில் இருக்கிறது. நீங்கள் வர முடியுமா?” என்று கேட்டார். நான் சரியென ஒப்புக் கொண்டேன்.
மறு நாள் அந்த நண்பருடன் பாகவதர் பங்களாவுக்குச் சென்றேன். அவர் என்னைப் பார்த்து வணக்கம் செய்தார். எனக்கு வயது 33. என் தோற்றம், பேச்சு அவரைக் கவர்ந்துவிட்டன. இரவு 10மணி முதல் 12வரை டியூஷன் வகுப்பு நடந்தது. இரவில் அங்கு தங்கிவிட்டுக் காலையில் அவருடைய காரில் வீட்டுக்குத் திரும்புவேன்.
ஒரு நாள் பாகவதர் சொன்னார் - “ஐயா, நீங்கள் என்னிடம் தங்கிவிடுங்கள். நான் அடிக்கடி திருச்சிக்கும் சென்னைக்கும் போகவேண்டியிருப்பதால் என்கூடவே நீங்கள் வருவதை விரும்புகிறேன். பள்ளி வேலையை விட்டுவிடுங்கள்” என்றார். நான் முடியாது என மறுத்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் என்னை வற்புறுத்தியதால், நான் முனிசிபல் கமிஷனரை அணுகி எல்லா விவரங்களையும் சொன்னேன். அவர் சொன்னார் - “உங்களுக்கு 5ஆண்டுகள் லீவ் தருகிறேன். நீங்கள் பள்ளியில் 36ரூபாய் வாங்குகிறீர்கள். பாகவதரிடம் 125ரூபாய் வாங்குவதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றேன். இராஜினாமா செய்ய வேண்டாம்” என்றார்.
நூறு ரூபாய் நோட்டை முதன்முதலில் பாகவதர் எனக்குக் கொடுத்தபோதுதான் பார்த்தேன். விரைவில் ஒரு முடிவுக்கு வந்தேன். குடும்பத்தின் வறுமை நிலையை போக்குவதற்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். பள்ளி வேலையை விட்டுவிட எண்ணி இராஜினாமா செய்து பாகவதரின் வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டேன்.
அவருக்கு இரவில் டியூஷன். பகலில் அவருடைய (பி.ஏ) உதவியாளர் ஆக இருந்தேன். 15 நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் போய்வருவேன்.
திருச்சியில் பாகவதருடைய பங்களா பிரமாண்டமாக இருந்தது. அவரது வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். அதைப் பற்றி அடுத்த இடுகையில்...

திங்கள், 9 மார்ச், 2009

திருமணம்

என் முதல் திருமணம் ஆம்பூரில் நடந்தது. கோவையிலிருந்து ஆம்பூருக்கு இரயில் கட்டணம் 3ரூபாய். சென்னைக்கு 5ரூபாய். ஜோலார்பேட்டையிலிருந்து நான்காவது இரயில் நிலையம்தான் ஆம்பூர்.
1931ல் திருமணம் - 5 நாட்கள் - (மாப்பிள்ளை அழைப்பு, தாராமுகூர்த்தம் , ஒளபாசனம், பாங்குனி முகூர்த்தம், நாகவல்லி) அப்போது என் வயது 22. 1932ல் அதாவது என் 23வது வயதில் நான் குடுமி எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக் கொண்டேன். பின்பு வேலை தேடத் தொடங்கினேன்.
என் ஆசிரியர் பயிற்சியைக் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளில் முடித்தேன். அங்கு நடைபெற்ற ஒரு ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அது இன்றும் என்னிடம் உள்ளது. சர்ட்பிகேட் தொலைந்து போயிற்று.
பின்பு ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினேன். பாப்ப நாயக்கன்பாளையம் முனிசிபல் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினேன். மாதம் ரூ.18. பின்பு ஜெயில்ரோட்டிலிலுள்ள முனிசிபல் பள்ளியில் பணியாற்றிய காலத்தில் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அது என் பொற்காலம். அது என்ன? அடுத்த இடுகையில்...

வியாழன், 5 மார்ச், 2009

அழகிய கையெழுத்துக்குக் காரணம்

எனது பள்ளிப் படிப்பைக் கோவை இலண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தேன். (இன்று அது சி.எஸ்.ஐ என்று அழைக்கப் படுகிறது.) அப்போது பள்ளியின் பிரின்ஸிபால் திரு. 'H.W.NEWWELL' இருந்தார். அவரது சிரித்த முகம் இன்றும் என் நினைவில் இருக்கிறது.
அது மட்டுமல்ல, அப்பள்ளியாசிரியர்கள் அனைவரும் என் நினைவில் இருக்கிறார்கள். அவர்கள் கற்பித்த முறை, நடந்து கொண்ட விதம் இவற்றை நினைக்கும் போதெல்லாம் உள்ளத்தில் ஒரு விதமான இன்பம் உண்டாகுகிறது. குறிப்பாக, 6ஆம் வகுப்பு ஆசிரியர் திரு. டி.வி.மதுரம் என்பவர் பாடம் நடத்தும்போது, கதைகள் சொல்வார். மேலும், எனது அழகிய கையெழுத்திற்கும் அவர்தான் காரணம். கையெழுத்துக்காகவும் பைபிள் தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றதற்காகவும் எனக்குப் பலமுறை பரிசுகள் (பென்சில்கள், ரப்பர், புத்தகம்) கொடுத்து ஊக்குவித்தார். அவரை நான் மறக்க முடியுமா?
நான் III FORM படித்தபோது (8ஆம் வகுப்பு) ஆங்கிலப் புத்தகத்தில் படித்த ஒரு பாடம் “ நீதிபதியின் கடன்” (வேக், நிகொலஸ் கதை) மாணவர்களை அழ வைத்தது. அக்கதையை நான் எனது பள்ளி மாணவர்களுக்குச் சொல்லிக் கண்ணீர் சிந்தும்படி செய்திருக்கிறேன்.
என் நண்பர்களுடன் அருகிலிருந்த போலீஸ் மைதானத்தில் ‘புட் பால்’ விளையாடுவதுண்டு. அந்த நாட்கள் இனிமையானவை. என் தந்தை என்னிடம் 1 ரூபாய் கொடுத்து, கோனியம்மன் கோவில் எதிரிலிருந்த அரிசிக் கடையில் அரிசி வாங்கி வரச் சொல்வார். 12படி அரிசி கிடைக்கும். (7கிலோ) அதை ஒரு பெரிய துண்டில் கட்டிக் கொடுப்பார் கடைக்கார அய்யர். நான் தலைமீது வைத்துக் கொண்டு வீடு திரும்புவேன். எனக்கு 3காசு கிடைக்கும் (1ரூபாய்க்கு 16அணா = 192பைசா).
என் தோற்றம் வேடிக்கையாக இருக்கும். சிரிக்க வேண்டாம் - இடுப்பில் வேட்டி, உடம்பில் சரட்டு, அதன்மேல் ஓப்பன் கோட்டு, தலைமயிர் பின்னி சடை போட்டுவிடுவார் என் தாயார். அப்பாவை ‘ஐயா’ என்று அழைப்பேன். இந்து மாணவர்கள் கிராப் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தலையில் வட்டமான தொப்பி அணிய வேண்டுமென்பது சட்டம். அது ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம்.

செவ்வாய், 3 மார்ச், 2009

காலந் தவறாமை

இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அத்துடன் கோவையில் பரவிய கொடிய நோயும் ஓடிவிட்டது. நாங்கள் மீண்டும் உப்பிலிபாளையம் வந்து சேர்ந்தோம். அருகில் ஆடிஸ் வீதியில் உள்ள அந்தோணியார் பள்ளியில் என்னைச் சேர்த்தார்கள். ’அறிவிலி’ வகுப்பில் ஆறு மாதம் படித்த பின் முதல் வகுப்புக்கு என்னை மாற்றினார்கள். (ஏழு வயது). ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஆங்கிலப் புத்தகத்தில் இருந்த ஒரு பாடம் - லேட் லத்தீப் என்பதை ஆசிரியர் கற்றுக் கொடுத்தார். லத்தீப் என்ற பையன் தினமும் நேரம் கழித்தே இரயிலுக்குச் சென்று இரயிலைத் தவற விட்டுப் பின் எவ்வாறு துன்பத்தையடைந்தான் என்பது என் உள்ளத்தில் வேருன்றி விட்டது.
அன்று முதல் இன்று வரை எங்கு போவதானாலும் சிறிது நேரத்துக்கு முன் அந்த இடத்துக்குப் போய்விடுவேன். ஒரு நாள் கூட நேரம் கழித்து எங்கும் போனதில்லை - சொல்லப் போனால், ஆங்கிலேயர் நமக்குக் கொடுத்து விட்டுப் போன நல்லப் பழக்கங்களில் ஒன்று, “காலம் தவறாமை” - (punctuality). அதை நாம் மறுக்க முடியாது.

திங்கள், 2 மார்ச், 2009

நடை பழக்கம்

அந்தக் கிராமம் வெற்றிலைத் தோட்டங்கள் நிறைந்த அழகான பகுதியாக இருந்தது. தோட்டத்தின் அருகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் எப்போதும் ஓடிக் கொண்டேயிருக்கும். ஆழமில்லை. அதனால் நான் தினமும் வாய்க்காலில் குளித்து விட்டு, என் வேட்டியைத் துவைத்து எடுத்துக் கொண்டு, உடுத்தியுள்ள ஈர வேட்டியுடன் வீட்டுக்குப் போய் அதை வேறு ஒரு துண்டால் சுற்றி வைப்பேன். அப்போதுதான் மறுநாள் அந்த வேட்டியில் காவி நிறம் உண்டாகும். தேவர் உடுத்தியிருப்பதைப் போல நான் காவி வேட்டியைப் பெருமையாக உடுத்திக் கொள்வேன். வாய்க்கால் கரையில் உள்ள பிள்ளையாருக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, அருகம்புல்லைத் தலை மீது வைத்துக் கும்பிட்டு விட்டு வீட்டுக்கு வருவேன்.
அப்போது என் வயது 5. வீட்டுக்குச் சென்றதும் என் தாயார் வெண்கல வட்டிலில் சிறிதளவு சோளக்களியை வைத்து தண்ணீரை ஊற்றி, அருகில் உலித்த வெங்காயமும் வைப்பார்கள். நான் அதை உண்ட பின் சிறிது நேரம் வெளியே சுற்றி விட்டு வந்து, பிறகு அம்மாவிடம் பால் குடிப்பேன். அந்தப் பழக்கம் என் 5வயது முடியும் வரை இருந்தது.
திரு. நஞ்சப்பத் தேவர் என்னை அதிகமாக நேசித்தார். என் பெற்றோர் என்னை மிகவும் செல்லமாக வளர்ந்தார். தேவர் என்னை அடிக்கடி வெற்றிலைத் தோட்டத்திற்கு அழைத்துப் போவதுண்டு. கொடிக் காலுக்குத் தண்ணீரில் நடந்துதான் போக வேண்டும். அது ஒரு சுகமான அனுபவம்.
அங்கு நாங்கள் உண்பது சோளம், ராகி, கம்பு, தினை ஆகிய தானியங்கள் மட்டும். பண்டிகை நாட்களில் அரிசிச் சோறு. வாழையிலை அதிகமாகக் கிடைக்காது. தையல் இலையில் மட்டும் பெற்றோர் உண்பார்கள். தினமும் கேழ்வரகுக் கழியை என் தட்டில் வைத்து, அதன் மத்தியில் குழி செய்து அதில் நெய் ஊற்றி, பனை வெல்லம் பொடி செய்து போட்டு என்னை உண்ண வைப்பார்கள். சில நாட்களில் கழியை மோருடன் கலந்து கரைத்துக் குடிப்போம்.
என் அக்காவைத் திருப்பூர் அனுப்பர்பாளையத்திலிருந்த தாய்மாமனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். என் தகப்பனார் வாரம் ஒரு முறையேனும் கோவைக்குச் செல்வதுண்டு. அப்போது என்னையும் அழைத்துப் போவார். நாங்கள் 7மைல் தூரம் நடந்தே கோவைக்கு வந்துவிட்டு, 7மைல் தூரம் நடந்தே வீட்டுக்குப் போய் விடுவோம்.
இந்த நடைப் பழக்கம் இன்று வரை இருக்கிறது. என் உடல் நலத்துக்குத் துணையாக இருப்பது எனது நடைதான் 85வயதுக்குப் பின் நடை தளர்ச்சியடைந்தது.