செவ்வாய், 29 டிசம்பர், 2009

செத்தும் கொடுத்தான் சீதக்காதி....


திருமதி நாயகம் காளிங்கராயர் அவர்களின் இறுதிக் காலம் நெருங்கியது. வேலூர் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. திரு.கிருஷ்ணராஜ் நாயகத்தின் உடலை எடுத்து காரில், நள்ளிரவில் ஊத்துக்குழி கொண்டு சென்றார்.
அன்று மாலை 5 மணிக்கு வழக்கம் போல், ரெட்பீல்ட்ஸிலுள்ள (Red Fields)  திரு.என்.மகாலிங்கத்தின் பேத்தி கற்பகத்துக்கு டியூஷன் சொல்லித் தரப் போனேன். என்னைக் கண்டதும் கருணாம்பாள் ஓடி வந்து, ‘மாஸ்டர், நாயகம் போயிட்டாங்க’ என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தேன். வீடு திரும்பினேன்.
மறு நாள் காலை ஊத்துக்குழி சென்றேன். திரு.கிருஷ்ணராஜ் எழுந்து வந்து துயரம் நிரம்பிய உள்ளத்துடன் நின்றார். நான் கண்ணீர் ததும்ப அவரது கைகளைப் பற்றினேன். அவருக்கு ஆறுதல் சொல்ல வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. என் கண்ணீரைக் கண்டு, அவர் எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, “மாஸ்டர், 20 நாட்களுக்குப் பிறகு நம் கோவை பங்களாவுக்கு வாருங்கள். நாயகத்தின் உடலை உடனே எரித்து விட வேண்டியதாயிற்று” என்றார்.
நான் துயரச் சுமையோடு வீடு திரும்பினேன்.
திரு.கிருஷ்ணராஜ் சொன்னது போல கோவை பங்களாவுக்குப் போனேன். அவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் ஒரு கவர் கொடுத்தார். கவரில் ரூ.1200 இருந்தது. வியப்படைந்த நான் கவரை அவரிடம் திருப்பிக் கொடுக்க முயன்றபோது  - அவர் தடுத்து சொன்னார், “மாஸ்டர், நாயகம் உயிர் பிரிவதற்கு முந்திய நாள் இந்த பணத்தைக் கவரில் வைத்து உங்களுக்கு கொடுக்கும்படி சொல்லியதால், தயவு செய்து இதை வாங்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் நாயகத்தின் ஆன்மா சாந்தியடையும்” என்றார்.
நான் கண்ணீர் கலங்கினேன். சிறிது நேரம்  மெளனமாக இருந்தேன். பின்பு கவரைப் பெற்றுக் கொண்டு மானசீகமாக (மனதுக்குள்ளேயே) நன்றியைச் சொல்லிவிட்டு கனத்த இதயத்துடன் வீடு திரும்பினேன்.
அந்த கவரில் பணத்துடன் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதம் இன்றும் என்னிடம் இருக்கிறது.
இந்த உண்மை நிகழ்ச்சி ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி வள்ளல்’ என்று சொல்வது போல் வள்ளல்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையே எடுத்து காட்டுகிறது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத சோக நிகழ்ச்சிகள் இரண்டுதான். ஒன்று என் அன்பு மனைவி இலட்சுமியின் மறைவு. மற்றொன்று என் அன்பு மாணவி நாயகம் காளிங்கராயர்.

என்னைப் பற்றி எனது தந்தை...

வீரராகவன் கல்லூரியில் சேர்க்க வேண்டிய காலம் வந்தது. எனது பரம்பரையில் கல்லூரியில் முதுகலை  பட்டம் பெற்றவர்கள் இல்லையென்ற குறையை போக்கிவிட்டான். எனக்கு முதலில் கல்லூரி பீஸ் கொடுத்து உதவியவர்கள் யார் யார்?
 PRICOL  நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு.என். தாமோதரன் என்பவர் இரண்டுமுறை கல்லூரி கட்டணம் கட்ட உதவினார். அதற்கு காரணமாயிருந்தவர் திரு.எல்.பக்தவத்சலம் என்பவர்.
நான் பள்ளியை விட்டு ஓய்வு பெற்றபின், எனது முன்னாள் மாணவர் ஊத்துக்குழி ஜமீந்தார் அவர்களின் மனைவி நாயகம் அவர்களுக்கு கம்பராமாயணம் கற்றுக் கொடுக்கச் சொன்னார்கள்.
சில மாதங்கள் இராமாயண வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அயோத்தி காண்டம், நகர் நீங்கு படலம் சொல்லிக் கொண்டிருந்தேன் ----
இராமனும் சீதையும் இலக்குவனும் அரண்மனையிலிருந்து காட்டுக்கு புறப்ப்டுகிறார்கள். நகர மக்கள் கண்ணீரை ஆறாகப் பெருக்கியவாறு அங்கு வந்து கூடினார்கள். மக்கள் மட்டுமா அழுதார்கள்?
கம்பர் சொன்னதைப் படியுங்கள்
ஆவும்     அழுத    அதன்    கன்றழுத   அன்றலர்ந்த
பூவும்       அழுத   புனல்     புள் அழுத  கள்ளொழுகும்
காவும்     அழுத   களிறு   அழுதகால்  வயப்போர்
மாவும்    அழுதன   அம்மன்னனை  மானவே

கையால் நிலந்தடவிக் கண்ணீரால்  மெழுகுவார்
உய்யாள்  பொற்கோசலையென்று  ஒவாது வெய்துயிர்ப்பார்
ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ யென்பார்
நெய்யால் அழல் உற்றது உற்றார் அந்நீள் நகரார்.
இந்த இரு பாடல்களையும் சொல்லிவிட்டு விளக்கத்தையும் நான் சொல்லும்போது, நான் உணர்ச்சி வயப்பட்டு சற்று நிறுத்தினேன். அப்போது நாயகம் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
”அம்மா, உள்ளே போய் தண்ணீர் குடித்துவிட்டு வாருங்கள். இந்த காட்சி எவரையும் துயரத்தால் அழும்படி செய்யக்கூடியது.  இனி நாளைக்குப் பாடம் தொடருவோம்” என்றேன்.

திருப்பூர் மருத்துவர் பத்மனாபனின் பணிவு

திருப்பூரில் என் மகன் தியாகராஜனைப் பார்த்து வர மனைவி இலட்சுமியுடன் போயிருந்தேன். இலட்சுமிக்கு உடல் நலம் சரியில்லை. இருமலால் அவதிப்பட்டாள். திருப்பூரிலேயே ஒரு மருத்துவரிடம்  இலட்சுமியை அழைத்துப் போக எண்ணினேன். மருமகள் மணிமேகலை சிலரிடம் விசாரித்து மருத்துவர் பத்மனாபன் பெயரைச் சொன்னதும் அவரைப் பார்க்கச் சென்றோம்.
மருத்துவரின் மருத்துவமனையில் பலர் காத்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் பார்த்து விட்டு சென்ற பிறகு நாங்கள் உள்ளே சென்றோம்.
நான் மருத்துவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு  இலட்சுமியை ஒரு நாற்காலியில் அமரச் செய்தேன். அப்போது திடீரென எதிர்பாராமல், மருத்துவர் பத்மனாபன் என் காலைத் தொட்டுக் கும்பிட்டார். நான் அதிர்ச்சியடைந்தேன்.
`சார், என்னைத் தெரியவில்லையா?` என்றார்.
`இல்லை`
`சார், நான் உங்கள் மாணவன். நீங்கள் பாடம் நடத்தும்போது அடிக்கடி கதைகள் சொல்வீர்கள்` என்று சொல்லிவிட்டு, தமது சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டுகள் ஐந்து எடுத்து என் கையைப் பற்றிக் கொடுத்துவிட்டு, `சார், என்னை ஆசிர்வதியுங்கள்` என்றார்.
நான் மருத்துவரை வாழ்த்தினேன். பிறகு, `டாக்டர், என் மனைவிக்கு இருமல் தொல்லை அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் பாருங்கள்` என்றேன்.
திரு.பத்மனாபன் என் மனைவியைச் சோதித்துவிட்டு, `சார், நான் மருந்து எழுதித் தருகிறேன். ஆனால் நீங்கள் திருப்பூரில் தங்க வேண்டாம். இங்கே, காற்றில் பஞ்சு கலந்துள்ளது. கோவைக்கே போய்விடுங்கள்` என்று சொல்லிவிட்டு, மேலும், `என் வீட்டுக்கு வந்து சாப்பிட வேண்டும்` என்று அழைத்தார்.
`டாக்டர், உங்கள் உதவியை மறக்க மாட்டேன். சாப்பாட்டுக்கு மற்றொரு சமயம் வருகிறேன். என் மனைவியின் உடல் நலம் முதலில் சரியாகட்டும். நான் கோவைக்கு செல்கிறேன்` என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

உள்ளத்தில் நல்ல உள்ளம்....


வழியில் பார்த்து தன்னுடன் காரில் அழைத்து சென்ற திரு.பி.எஸ்.ஜி.கோவிந்தசாமி அவர்களுடைய மில்லுக்குள் சென்று அவரது அறையில் அமர்ந்தோம். ` நீங்கள் சன்மார்க்க சங்கத்தில் வள்ளலாரைப் பற்றிப் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குள் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சிறப்பாக கூறியது என்ன? சொல்லுங்கள்` என்றார்.
நான் சொன்னேன் “ஊழ்வினைதான் வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. முற்பிறவியில், கண்ணகியும் கோவலனும் பெரும் பாவங்களைச் செய்தார்கள். அவற்றின் விளைவுகளை அடுத்தப் பிறவியில் அனுபவித்தார்கள். ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்என்பது”.
(எனது கருத்து சிலப்பதிகாரத்தில் மூன்று கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கிறது என்று உரைப்பார்கள். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். ஆனால் அரசியலில் பிழை செய்தோருக்கும் உரைசால் பத்தினியை ஏத்தும் உயர்ந்தோருக்கும் ஊழ்வினை ஒரு உரு எடுத்து வந்து உணர்த்தும் என்பதே அடிகளார் உரைக்கிறார் என்பதே எனது கருத்து. இதனால் கோவலன் கண்ணகி திருமணத்தில் வாழ்த்துபவர்கள் நாவில் “காதல்ர் கை நெகிழாமல் தீது அறுகஎன்ற சொற்கள் உருவில் வந்த்து ஊழ்வினை. “கோவலன் கள்வனாகில் கொன்று கொணர்கஎன்ற நாவில் ஊழ்வினை உருத்து வந்தது என்பது தெள்ளென விளங்கும். எனது எளிய தமிழில் இலக்கியம் என்ற வலைப்பூவில் இதைப் பற்றி விரிவாக எழுத உள்ளேன். வீரராகவன்).
நீங்கள் அடிக்கடி இங்கு வந்தால் நாம் பேசிக் கொண்டிருக்கலாம்என்றார் கோவிந்தசாமி. பிறகு நான் எழுந்து புறப்பட எண்ணிய வேளையில், “கொஞ்சம் பொறுங்கள்என்று சொல்லிவிட்டு, தமது காசோலை ஒன்றில் ரூ2000 என்று எழுதி என்னிடம் தந்தார்.
நான் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். அவருக்கு நான் நன்றி சொன்னேன். “ஐயா, குசேலருக்கு கண்ணபிரான் முகமறிந்து செய்த உதவியைப் போல செய்து விட்டீர்கள்என்று சொல்லும்போது என் கண்கள் குளமாயின.
அதன்பிறகு நான் அவரிடம் சென்று இலக்கியங்களைப் பற்றிப் பேசினேன். நான் போனபோதெல்லாம் எனக்குப் பலமுறை ரூ.900/-, ரூ.600/-, ரூ.1000/- கொடுத்து என் வறுமை நிலையைப் போக்கிய அந்த வள்ளலை நான் மறக்க முடியுமா?

எனக்குப் பண உதவி செய்த வள்ளல்கள்
(சிலரைப் பற்றி இங்கு குறிப்பிட்டாலும் ஒரு தனி பட்டியலே எழுதி வைத்திருக்கிறார் நன்றி எனக் குறிப்பிட்டு. அதனை தன் சுயசரிதையின் இறுதியில் எழுதியிருப்பதால் நானும் இறுதியில் அந்த பட்டியலை வெளியிடுகின்றேன்.சிலரின் உதவிகளை வாய்மொழியாக நினைவு கூர்ந்து கூறியுள்ளார் வீரராகவன்)
என் முன்னாள் மாணவர்கள் திரு.சோமு ( சோமு மெடிக்கல்ஸ், சாயிபாபா காலனி, கோவை), திரு. பி.சுப்பிரமணியம் ( சாந்தி கியர்ஸ்), திரு.சந்திர சேகரன் (ஸ்டேன்ஸ் மோட்டார்ஸ்), திரு.ஜெகதீசன் (சிட்கோ), (பக்கத்தின் அடிக்குறிப்பில் திரு.குப்புராஜூ (அசோகா பாக்கு), காட்டூர் சீனிவாசன், திரு.எஸ்.கோவிந்தராஜன் (ஆறு கவலை தோட்டம், குறிச்சிக்கோட்டை, உடுமலை) திரு.சம்பந்தம் (ஏர்கான்). எனக் குறிப்பிட்டுள்ளார்)



இரவிச்சந்திரனின் திருமணமும், உதவி செய்த நல்ல உள்ளங்களும்

இரவிச்சந்திரனுக்கு மேட்டுப்பாளையத்தில் விதவைத் தாயுடன் வசித்துக் கொண்டிருந்த சரசுவதியைத் திருமணம் செய்து வைத்தேன். சரசுவதி பிரிக்கால் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் என் அன்பு மகள் பானுமதியும் அவளது கணவர் திரு.பாலசுப்பிரமணியமும் அவர்களது உதவியை நான் எக்காலத்தும் மறக்க முடியாது. இரவிச்சந்திரன் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இரவிச்சந்திரனை I.T.I யில் சேர்த்துப் படிக்க வைத்தேன். அவன் படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டான். காரணம் எனது வறுமை நிலைதான். அதை நினைத்து நானும் இலட்சுமியும் வருத்தப்படாத நாளே கிடையாது.
ஆனால் சில ஆண்டுகள் கழிந்தபின், என் பொருளாதாரம் சற்று உயரத் தொடங்கியது. ஒரு நாள் எதிர்பாராமல் அவினாசி ரோட்டில் நான் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திரு.பி.எஸ்.ஜி கோவிந்தசாமி தமது காரில் எதிரில் வந்தார். என்னைக் கண்டதும் காரை நிறுத்தி என்னை தன்னுடன் காரில் வருமாறு அழைத்தார்.

திங்கள், 21 டிசம்பர், 2009

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

இரவிச்சந்திரனுக்கு திருமணம் செய்ய எண்ணிக் கொண்டிருந்த வேளையில், என் அன்பு மனைவி இலட்சுமியின் உடல் நலம் கெட்டு விட்டது. டாக்டர் ராஜரத்தினம் மருத்துவமனையில் இலட்சுமியைச் சேர்த்தேன். 10 மாதங்கள் அங்கு சிகிச்சை அளித்தும் பயனில்லை. பின்பு, சென்னையிலுள்ள டாக்டர் அரங்கபாஷ்யம் மருத்துவமனைக்கு இலட்சுமியை அழைத்துச் சென்றார்கள் என் மக்கள் - மருமகள் மணிமேகலை ஆகியவர்கள். டாக்டர் அறுவை சிகிச்சை செய்தார். எல்லோரும் லட்சுமிக்கு உதவியாக சென்னையில் ஒரு லாட்ஜில் தங்கினார்கள். ஒரு மாதத்துக்குப் பின் லட்சுமியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள். பணம் நிறைய செலவு செய்தும் லட்சுமி முழுமையாக குணமாகவில்லை. இங்கு 2 மாதம் மருத்துவ மனையில் (குமரன் மருத்துவமனையில்) சேர்த்து சிகிச்சையளித்தோம். அத்தனையும் வீணாகிவிட்டன. ஏன்? அதுதான் விதி.
என் அன்பு மனைவி இலட்சுமியை 22.9.1992ல் இழந்து மீளாத் துயரத்தில் ஆழ்ந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் - என் ஆயுட்காலம் முழுவதும் மறக்க முடியாத சோக நிகழ்ச்சி இது.
ஒராண்டு கழிந்தது. லட்சுமியின் மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்து உதவிய அத்தனை பேருக்கும் பணம் திருப்பி கொடுக்க வேண்டாமா?
ஆகவே, எங்களுக்கிருந்த ஒரே சொத்து 5 1/2 செண்ட் காலி வீட்டுமனை அந்த இடத்தை விற்றுக் கடன்களைத் தீர்த்துவிட எண்ணினேன்.
இங்கு ஒன்று சொல்ல வேண்டும். இலட்சுமி உயிருடன் இருந்தபோது, எங்கள் வீடு சிறிது பழுதடைந்தது. அதனால் இடிந்த வீட்டின் கூரையைப் பிரித்து ஓடுகளையும் மரச்சட்டங்கள் கதவு, சன்னல் எல்லாவற்றையும் சுலோச்சனாவுக்குக் கொடுத்து விட்டோம்.( அன்பளிப்பாக). அவள் அவற்றை லாரியில் ஏற்றி பல்லடத்துக்கு எடுத்து போய்விட்டாள்.
வீட்டுமனையை ஒரு இலட்சத்து 55 ஆயிரத்துக்கு அருகே வசித்த திரு.சுப்பிரமணிய அய்யருக்கு விலைக்கு கொடுத்து விட்டோம். அந்த பணத்தை கலைச்செல்வனுக்கும், பானுமதிக்கும், சம்பந்தி திரு.சீனிவாசனுக்கும், மணிமேகலைக்கும் கொடுத்து கடனை தீர்த்து விட்டோம். ஆனால் இரவிச்சந்திரன் மட்டும் தான் கொடுத்த சீட்டுப் பணம் ரூபாய் 10,000 திரும்ப பெற விரும்பவில்லை. `அம்மாவுக்குக் கொடுத்த உதவியை நான் திரும்ப பெற மாட்டேன்` என்று சொல்லியது அவனது பெருந்தன்மையை காட்டுகிறது. மீதியிருந்ததோ ரூ.3000. அதனை வீரராகவனுக்கு கொடுத்து விட்டோம். (அந்த பணத்தில் நான் இரு புத்தக அலமாரி செய்தேன் - வீரராகவன்).
எல்லாம் முடிந்தது. என் மனம் நிம்மதியடைந்தது.

என் குடும்பத்தைப் பற்றி...

 நான் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றது 1969. மேலும் ஓராண்டு வேலை கொடுத்து உதவி செய்தார் பாதர் சின்னையன். ஆனால் பென்ஷன் 1968 வரையுள்ள காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ரூ.33/- அளித்தது அரசாங்கம். அதுவும் சென்னை ஏ.ஜி. ஆபிசில் (அக்கவுண்ட் ஜெனரல்) பாகவதரின் இரண்டாவது மாப்பிள்ளை திரு.சுந்தரமூர்த்தியை நேரில் சந்தித்து பேசிய பிறகு ஒரே வாரத்தில் எனக்கு பணம் கிடைத்தது.
இனி என் குடும்பத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
எங்களுக்கு (எனக்கும் இலட்சுமிக்கும்) நான்கு ஆண் குழந்தைகள் - தியாகராஜன், கலைச் செல்வன், இரவிச்சந்திரன், வீரராகவன் ( இந்த இடுகையை எழுதும் நான்).
 இரண்டு பெண் குழந்தைகள் - பானுமதி, (மனு என்கிற) பத்மினி.
இவர்களில் கலைச் செல்வன் மட்டும் குடும்பத்தில் பற்றுதலோ, பாசமோ இல்லாமல் இருந்தான். சற்று முரட்டுத்தனமாகவும் இருந்ததால் அவனுடைய திருமணத்துக்குப் பின் குடும்பத்திலிருந்து பிரிந்தே போய்விட்டான்.
தியாகராஜனுக்குப் பழனியிலிருந்த திரு.சீனிவாசன் என்பவருடைய மகள் மணிமேகலையை திருமணம் செய்து வைத்தேன்.
கலைச்செல்வனுக்கு நெய்க்காரப்பட்டியிலுள்ள திரு. நடராஜன் என்பவருடைய மகள் கலாவதியை திருமணம் செய்து வைத்தேன்.
என் பெரிய பெண் பானுமதியைப் பெரிய நாய்க்கன் பாளையத்திலுள்ள திரு. ரங்கசாமி என்பவருடைய மகன் பாலசுப்பிரணியன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தேன்.
அடுத்து ஆத்தூரிலுள்ள திரு. பொன்னுசாமியும் மற்றும் சிலரும் என் மகள் பத்மினியைப் பெண் கேட்க வந்தார்கள்.
நான் சொன்னேன், `ஐயா, உங்கள் மகனுக்குப் பெண் தருகிறேன். ஆனால் நகை எதுவும் போட மாட்டேன். நகை வேண்டுமென்றால், கடைத்தெருவில் நகைக் கடை வைத்திருப்பவர்களிடம் பெண் கேளுங்கள். என்னால் எளிமையாக  சிறப்பாக திருமணம் செய்து வைக்க முடியும். காப்பி சாப்பிடுங்கள்` என்றேன்.
அவர்கள் கோபித்துக் கொண்டு எழுந்து போய்விட்டார்கள்.
'God's will is mightier than human force. There is a divinity that shapes our ends.'
20 நாட்களுக்குப் பின் ஆத்தூர்காரர்கள் மீண்டும் என்னிடம் வந்து `ஐயா, நகை எதுவும் வேண்டாம். பெண் கொடுத்தால் போதும். திருமணம் ஆத்தூரில் வைத்துக் கொள்வோம்` என்றார்கள். நான் ஒப்புக் கொண்டேன்.
பெரிய மாப்பிள்ளை திரு.பாலசுப்ரமணியன் L.M.W -ல் வேலையில் இருந்தார். (தற்போது ஓய்வு பெற்று சொந்தமாக தொழில் செய்கிறார் - மூன்று மகன்கள் - இருவருக்கு திருமணமாகி விட்டது - வீரா)
இரண்டாவது மாப்பிள்ளை திரு.ஜெயபால் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்தார்.
இரவிச்சந்திரனுக்குத் திருமணம் செய்ய எண்ணிக் கொண்டிருந்த வேளையில் ஒரு தடங்கல் ஏற்பட்டது.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

குறள் போல் வாழ்

கோவையை அடுத்துள்ள சவுரிபாளையத்தில் 6 ஆண்டுகள் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தேன். மாரியம்மன் கோவிலில் மாலை 7 மணி முதல் 9 மணி வரை  ஞாயிறுதோறும் வகுப்பு நடந்தது. 25 முதல் 35 வரை மக்கள் வ்ருவார்கள். இடையிடையே குறளுக்கு தக்கபடி சிறு சிறு கதைகள் சொல்வதை மக்கள் விரும்பிக் கேட்டார்கள்.
இரவில் நான் வீடு திரும்ப என்னை வண்டியில் அனுப்பி வைத்தார்கள். ஆறு ஆண்டுகள் முடிந்தபின் எனக்கு பாராட்டு விழா நடத்தி எடைக்கு எடை நெல்லும், ஒரு தட்டு நிறைய ரூபாய் நாணயங்களும், பொன்னாடையும் அளித்து பெருமைப் படுத்தியவர்கள் யார்? அவர்கள் தான் திரு.ஆறுமுகத் தேவரும் அவரது மனைவியார் திருமதி வள்ளியம்மாளும்.
இந்நிகழ்ச்சியை நான் என்றும் மறக்க முடியாத ஒன்று. திருக்குறள் வகுப்பில் நான் சொன்ன விளக்கங்கள் என் மனதையும் செம்மைப் படுத்தியது.
அடுத்து புலியகுளத்தில் ஓராண்டு குறள் வகுப்பு நடத்தினேன். அதற்கு ஏற்பாடு செய்து பொருளுதவி செய்த திரு. குப்புராசு என்பவர் பிற்காலத்தில் தமிழ் கல்லூரியில் சேர்ந்து ‘புலவர்’ பட்டம் பெற்றார்.

பிரதமர் இந்திராகாந்தியுடன் ஆசிரியர்கள் சந்திப்பு

ஒரு நாள் பாதர் பிரதமரை பார்த்து வர எண்ணினார். எங்கள் பள்ளியில் பணியாற்றிய திரு.கே.சுப்பிரமணியம் என்கிற கணித ஆசிரியரின் தமையனார் டெல்லியில் இராணுவப் பிரிவில் ஒரு ஆபிசராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் மூலமாக பிரதமர் இந்திராகாந்தி அவர்களை பார்க்க ஏற்பாடு செய்தோம்.
ஏப்ரல் மாத விடுமுறையில் பாதர் சின்னையன் தலைமையில் ஆசிரியர்கள் புறப்பட்டோம். டெல்லியை அடைவதற்கு முன்பு 110 மைலுக்கு முன்னுள்ள ஆக்ராவை அடைந்தோம். மன்னர் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டிய பளிங்குக் கல்லால் ஆன ‘தாஜ்மகாலை’ப் பார்த்து மகிழ்ந்தோம்.
பின்பு டெல்லியை அடைந்தோம். சப்தர்ஜங் சாலையில் பிரதமரின் இல்லம் இருப்பதால் 1 கிலோ மீட்டருக்கு முன் இராணுவக் காவலர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள். எங்களிடமிருந்த அனுமதி கடிதத்தைக் காட்டினோம்.
ஒரு மணி நேரத்துக்குப் பின்னால் எங்களை அனுமதித்தார்கள். அவரது இல்லம் சிறியதாயிருந்தது. ஒரு அறையில் காத்திருந்தோம்.
சிறிது நேரத்தில் பிரதமர் வந்தார். நாங்கள் வணக்கம் சொன்னோம். கைகூப்பி வணக்கம் செய்து எங்களை அமரச் சொன்னார்.
“ நாங்கள் கோயம்புத்தூரிலிருந்து வருகிறோம். தூய மைக்கேல் பள்ளி ஆசிரியர்கள். தங்களைக் காண 2000 மைல் தொலைவிலிருந்து வந்திருக்கிறோம். உங்கள் அறிவுரையைத் தாருங்கள்” என்றேன்.
பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், “ நீங்கள் ஆசிரியர்கள். உங்களுக்கு நான் என்ன சொல்வது? மாணவர்களுக்கு நாட்டுப் பற்றைக் கற்றுக் கொடுங்கள். இந்தியாவின் பெருமையை அவர்கள் உண்ருமாறு எடுத்துச் சொல்லுங்கள்” என்றார்.

பிறகு மேலும் ஆசிரியர்களின் கடமையையும் மாணவர்களின் பொறுப்பையும் பற்றி எங்களுடன் சிரித்தபடியே உரையாடினார். பிறகு அவருடன் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம்.

அதிசயங்களே அசந்து போகும் அதிசயம்....

ஐதராபாத்திலுள்ள சாலார்ஜங் மியூசியத்தில் உள்ளது “மகதலேனாள்” எனும் சிற்பம். பெண்ணின் முகம் துணியால் மூடப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது, அது துணியல்ல, சிற்பி அவ்வாறு சலவைக் கல்லில் செய்திருக்கிறான். அதை எப்படி செய்தான்? அதைப் பார்த்து பிரமித்துப் போனேன். உலகெங்கும் சிற்பக்கலை புகழ் பெற்று விளங்குகிறது.
அந்த ஒரு சிலைக்கு மட்டும் 5 கோடி தருவதாக (அந்த காலக் கட்டத்தில்) நிஜாமிடம் வெள்ளைக்காரர்கள் வெளியேறும்போது விலைக்கு கேட்டார் நிஜாம் மறுத்து விட்டார். - இந்த செய்தியை ஒரு காவலாளி எங்களிடம் சொன்னார்.
வெனிஸ் நகரத்தின் சிற்பி பற்றி புத்தகத்தில் படித்துள்ளேன். - ஏன்? நானும் ஒரு சிற்பி. எனது சிற்பத்தை தூய மைக்கேல் மேனிலைப் பள்ளியில் வைத்துவிட்டு வந்தேன். அதன் அருமையை அறியாதவர்கள் அதை அழித்து விட்டார்கள். (அதன் புகைப்படம் உள்ளது. விரைவில் இடுகையில் வெளியிடுகிறேன் - வீரராகவன்).
வழியில் கோவா சென்றோம். அங்கே இன்னொரு அதிசயம் கண்டேன்.
எங்களை ஒரு ச்ர்ச்சுக்குள் கூட்டிச் சென்றார் பாதர் சின்னையன்.
ஒரு கண்ணாடிப் பெட்டியில் செயிண்ட் பிரான்சிஸ் எனும் கத்தோலிக்கப் பாதிரியாரின் உடல் 400 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1964ல் பார்த்த உடல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வெளியே எடுத்து வந்து மக்களின் பார்வைக்கு வைப்பார்கள். நாங்கள் பார்த்தபோது உடல் 3 1/2 அடி நீளமாகக் குறைந்து இருந்தது. இனி, கி.பி 2012ல் பார்க்க முடியும்.
பின்பு நாங்கள் பம்பாய்க்குச் சென்றோம். அன்று மாலையில் மிகப் பிரமாண்டமான கூட்டத்தில் போப்பாண்டவர் பேசினார். அவரது பேச்சை அப்போதே டைப் செய்து மக்களுக்கு அதன் பிரதிகளை வழங்கினார்கள். எங்கள் பாதருக்கும் ஒன்று கிடைத்தது. அந்த பிரதியைப் பாதர் என்னிடம் கொடுத்தார். நான் அதை எனது டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.
பம்பாய் பயணம் ஒரு இனிய அனுபவம்.
ஒரு நாள் பாதர் சின்னையன் எனக்கு ஒரு அழகான கண் கண்ணாடி வாங்கி கொடுத்தார். அதை ஓராண்டுக்கு மேல் அணிந்து கொண்டிருந்து விட்டு பின் நீக்கி விட்டேன். அவருக்கு பக்குவமாக சொல்லி சமாதானம் செய்து விட்டேன்.
( என் தந்தை பிறகு இறுதி வரை கண்ணாடி அணியவே இல்லை. நானோ பத்து வயதிலேயே என் தந்தையாரின் அறிவுரை கேளாது இரவிலும் போதிய வெளிச்சமில்லாத சமயத்திலும் படுத்து கொண்டே படித்த பழக்கத்தினால் கண்ணாடி அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. - வீரராகவன்)
பிரதமர் இந்திராகாந்தியை நேரில் சென்று பார்த்து உரையாடியது மறக்க முடியாத அனுபவம். அதைப் பற்றி அடுத்த இடுகையில்

வியாழன், 22 அக்டோபர், 2009

சிலையெடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

பாதர் சின்னையன் என்னை அதிகமாக நேசித்தார். அவர் என்னிடம் கலந்து பேசாமல் எதையும் செய்ய மாட்டார். பாதருடைய பிறந்த நாளிலும் மற்றும் விழாக்களின்போதும் அவர் ஆசிரியர்களுக்கு இரு வகை விருந்து (சைவம்+அசைவம்) கொடுத்து மகிழ்விப்பார். இந்த பாரபட்சமற்ற செயல் அவரது புகழை மேலும் உயர்த்தியது. இவ்வாறு தலைமை  ஆசிரியர் தம்முடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருந்து கொடுப்பதும்,  சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களை  ஏகடியம் செய்யாது, ஒதுக்காது, மதித்து உபசரிப்பது வேறு எங்குமே காண முடியாது. பாதர் சின்னையன் காலம் புனித மைக்கேல் மேனிலைப் பள்ளியின் பொற்காலம்.
1964ல் ரோமாபுரிலிருந்து போப்பாண்டவர் ஜான்பால் பம்பாய் வருவதாக கேள்வியுற்ற பாதர் சின்னையன் ஆசிரியர்களை  அழைத்துக் கொண்டு பம்பாய் போக திட்டமிட்டார். பள்ளி பேருந்தில் நாங்கள் டிசம்பர் மாதம் சமையற்காரருடன் புறப்பட்டோம்.
வழியில் கத்தோலிக்கப் பள்ளிகளில் இரவு நேரங்களில் தங்கினோம். ஐதராபாத்தில் உள்ள "சாலார்ஜங் மியூசியம்" கண்டுகளித்தோம்.
உலகில் வேறு  எங்கும் காணமுடியாத "மகதலேனாள்"  எனும் ஒரு பெண்ணின் சிலை கண் கொள்ளாக் காட்சியாகும்.  அப்படியென்ன அதில் விசயம்?

லெமூரியா கண்டம் இருந்ததா?

"குமரிக் கண்டம்" படத்தை  ஒரு பெரிய தாளில் வரைந்து பள்ளிச் சுவரில் வைத்தேன். எங்கள் பள்ளியில் நடைபெற்ற ஒரு ஆசிரிய மாநாட்டுக்கு வெளியூர்களிலிருந்த வந்த ஆசிரியர்கள் அதனைப் பார்த்து வியப்படைந்தனர். பாதர் சின்னையனிடம் விசாரித்துவிட்டு என்னை சந்தித்து விளக்கம் பெற்றார்கள்.  பாதர் சின்னையனிடம் என் மதிப்பு உயர்ந்தது.
(என் தந்தையாரிடம் இருந்த ஆதாரங்களில்  கீழ்க்கண்டவாறு  குறிப்பிட்டு எழுதியுள்ளார்.  அவர் வரைந்த படத்தையும்  விரைவில் வெளியிடுகிறேன் -  வீரராகவன்)
25000 ஆண்டுகளுக்கு  முன்பிருந்த 'லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியே 'குமரிக் கண்டம்'.  இது 3 முறை கடல் பொங்கியதால் அழிந்தது.
முதல் கடல்கோள் - கி.மு 2378
இரண்டாவது கடல்கோள் - கி.மு 504
மூன்றாவது கடல்கோள் - கி.மு 306
ஆதார நூல்கள் -  மகாவமிசம், தீபவம்சம், இராஜாவளி ஆகிய இலங்கை  வரலாற்று நூல்கள்.

ஆனால்  இதைப் பற்றி தற்போது பல கருத்துக்கள் வருகின்றன.

அதனைப் பற்றி இந்த இடுகைகளில்  காணலாம்.
http://velu.blogsome.com/2http://naayakan.blogspot.com/2007/08/blog-post_27.htmlhttp://naayakan.blogspot.com/2007/08/blog-post_27.html006/03/25/l/
http://naayakan.blogspot.com/2007/08/blog-post_27.html

செவ்வாய், 20 அக்டோபர், 2009

பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நாட்டு நடப்பு அறிய ஒரு வழி

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பாதர் அருள்சாமி அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். நான் வருத்தப் பட்டேன். அவர் என்னிடம் கூறினார்- "நான் அமெரிக்காவுக்குப் போக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. உங்களைப் பற்றிப் பாதர் சின்னையனிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் பள்ளியை விட்டு விலக வேண்டாம்" என்று சொல்லிவிட்டு என்னை வாழ்த்தினார். அவருக்கு பிரிவுபசாரம் நடந்தது.
பாதர் சின்னையன் பள்ளியில் சில மாற்றங்களை கொண்டு வந்தார். மாணவர்களை விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு ஆசிரியர்கள் பேருந்தில் அழைத்து செல்ல வேண்டும் என்ற புதிய முறையை கொண்டு வந்தார். அதனால் நாடு முழுவதும் சுற்றி பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கோவை மாவட்டத்திலேயே முதன்முறையாக - 1958ல் பள்ளிகளில் ஒரு வழக்கத்திற்கு முன்னோடியாக அறிமுகம் செய்த பெருமை எனக்கு உண்டு. அதாவது - பள்ளிக் கட்டிடத்தில் வெளிப்புறச் சுவற்றில் பெரிய கரும்பலகை  கட்டித் தரும்படி கேட்டேன். 
தினமும் காலை 7.30 மணிக்குப் பள்ளிக்குச் சென்று விடுவேன். "The Hindu" பத்திரிக்கையையும் "தினமணி" பத்திரிக்கையையும் பியூன் என்னிடம் கொடுத்ததும் நான் முக்கியமான செய்திகளைக் கரும்பலகையில்  எழுதி வைப்பேன்.  மாணவர்களும் ஆசிரியர்களும் அன்றைய நாட்டுநடப்பு செய்திகளைப் படிப்பார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த பாதர் சின்னையன் எனக்கு  அதற்காக மாதம் ரூ.30/- கொடுத்து வந்தார்.
இதனைக் கண்ட வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் என்னைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
மற்றொரு சிறப்பு உண்டு. அதாவது பிரம்பைக் கையில் தொடாமலேயேஅப்பள்ளியில் இறுதி வரை  பணியாற்றி ஓய்வு பெற்றேன்.



செவ்வாய், 8 செப்டம்பர், 2009

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை...


என் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சண்முகத்துக்கு டெக்ஸ்டூலில் ஒரு கிளார்க் வேலை கொடுக்கும்படி பாதரிடம் ஒரு சிபாரிசு கடிதம் கேட்டு வாங்கி கொடுத்தனுப்பினேன். சண்முகம் வேலையில் சேர்ந்தான்.
     பின்பு அவனுக்குத் திருமணம் செய்து வைத்தேன். 3 ஆண்டுகள் கழிந்தன. அவனது மாமனார் என்னையும் இலட்சுமியையும் இராமசாமி நகர் வீட்டிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டார். காரணம் சண்முகம் சின்னம்மா இலட்சுமியிடமும் குழந்தை தியாகராஜனிடமும் அதிக பாசத்துடன் நடந்து கொண்டான். பாலக்காடு சென்ற அவனுடைய மாமனார் எந்திரம் வாங்கி வந்து அவனுக்குக் கட்டினார்.
      ஒரு நாள் காலை சண்முகம் என்னருகில் வந்து தலை குனிந்தபடியே, `அப்பா, நாம் பிரிந்திருந்தால் நல்லது` என்றான்.
        `சரி, அப்படியே செய்வோம். நீ சந்தோஷமாக இருந்தால் போதும்` என்றேன்.
அன்று காலையிலேயே நான் காட்டூர் சென்று எனது முன்னாள் மாணவனைச் சந்தித்துப் பேசினேன். உடனே அவன் எனக்கு வீடு தருவதாகச் சொன்னான்.
       சண்முகம் மாலையில் கம்பெனியிலிருந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பே நாங்கள் குழந்தையுடன் சாமான்களை எடுத்துக் கொண்டு போய்விட்டோம்.
        பின்பு சுலோச்சனா - இராமசாமி திருமணம் நடந்தது. ஒரு ஆண்டு கழித்து சந்திரா - பரமசிவம் திருமணம் நடந்தது. 
        அந்த திருமணங்களுக்கு வாங்கிய கடன்களை, நான் பள்ளியை விட்டு விலகிய பின் கிடைத்த P.F. பணம் கொடுத்துத் தீர்த்தேன். மேலும் என் தகப்பனாருடைய கடனையும் தீர்த்தேன். மீதி ரூ.1000 கொடுத்து, சோமு கவுண்டரிடம் 5 1/2 சென்ட் வீட்டுமனை வாங்கினேன்.
      அந்த இடத்தில் ஒரு வீடு கட்ட எண்ணினேன். என்னுடன் பள்ளியில் பணியாற்றிய நண்பர் திரு.கே.சுப்பிரமணியம் என்பவரிடம் பணம் கடனாகப் பெற்றேன். அந்தக் கடனை மூன்று ஆண்டுகளில் தீர்த்தேன்.
       சுலோ, சந்திரா திருமணங்களுக்கு உதவியவர்கள் என்  மாணவர்களான புரவிபாளையம் ஜமீந்தாரின் மக்கள் திரு.கிரிராஜ், திரு.வெற்றிவேல்.
            இத்தனை பேரையும் நான் மறப்பேனா?

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

தட்டுங்கள் திறக்கப்படும்.

             பூனாவிலிருந்தபோது, பார்வதி கோவிலில் சிவாஜி வைத்திருந்த வாள் (4½ அடி நீளம்) அங்கிருந்ததைப் பார்த்தேன். சற்றுத் தொலைவிலிருந்த ஆகாகான் மாளிகையைப் பார்த்தேன். அங்குதான் காந்தி சிறை வைக்கப்பட்டிருந்தார். அவருடன் இருந்த மனைவி கஸ்தூரிபாயையும் செயலாளர் மகாதேவ தேசாயையும் இழந்து துயரத்தில் ஆழ்ந்தார்.
பூனாவிலிருந்து திரும்பிய நான் வேலை தேட எண்ணினேன். ஒரு வாரம் கழிந்தது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் என்னை எதிர்பாராமல் சந்தித்து, மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் (தற்போது கோவை இரயில் நிலையத்திற்கு பின்புறம் இராயல் தியேட்டர் எதிரில் மேனிலைப் பள்ளியாக உள்ளது). ஒரு வேலை காலியாக இருப்பதாகச் சொல்லி, என்னைப் பாதர் அருள்சாமியிடம் அழைத்துச் சென்றார். என்னைப் பற்றிய விவரங்களைப் பாதரிடம் சொன்னார் நண்பர்.
       ”நீங்கள் பாகவதரிடம் இருந்தபோது அவர் கொடுத்த அளவு சம்பளம் என்னால் தரமுடியாது. ரூ.50 மட்டும் தருவேன்” என்றார்.
      ”இந்த சம்பளம் போதாது. நான் சென்னைக்கே போகிறேன்” என்றேன். ”நீங்கள் போகவேண்டாம். உங்களுக்குப் பணம் தேவைப்படும்போது என் அறைக்கு வந்து கதவைத் தட்டுங்கள் – உங்களுக்குப் பணம் தருகிறேன். நான் இந்தப் பள்ளியில் இருக்கும்வரை நீங்கள் போக வேண்டாம்” என்றார்.
      ”இயேசு கிறிஸ்து சொன்னார் – தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று – அதை நீங்கள் சொல்வதால், நான் பள்ளியை விட்டுப் போக மாட்டேன்” என்று சொன்னேன்.
       அவர் வியப்புடன் “உங்களுக்குப் பைபிள் தெரியுமா?” என்று கேட்டார். நான் சொன்னேன். – “பாதர் நான் இலண்டன் மிஷன் பள்ளியில் (தூய மைக்கேல் மேனிலைப் பள்ளிக்கு பின்புறம் சி.எஸ்.ஐ மேனிலை பள்ளி என்ற பெயரில் உள்ளது) படித்தபோது, பைபிளில் உள்ள St.Mathew, St.Luke படித்தேன். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்வு எழுதிப் பரிசுகளும் பெற்றேன்” என்றேன். “இதை ஏன் முதலில் சொல்லவில்லை?” என்று கேட்டார்.
”தன்னைத்தான் தாழ்த்திக் கொள்கிறவன் எவனும் உயர்த்தப்படுவான்” என்று நான் சொன்னபோது அவர் சிரித்தார்.
       சில மாதங்கள் கழிந்தன. 1945ல் ஒரு நாள் பாதர் என்னைத் தமது அறைக்கு மாலையில் வரச் சொன்னார். நான் சென்றேன்.
        ` நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். காட்டூரில் ஒரு சர்ச் இருக்கிறது. முன்புறம் ஒரு டவர் கட்ட வேண்டும். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. உங்கள் பாகவதரிடம் சொல்லி ஒரு பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்து தாருங்கள்` என்றார் பாதர்.
              பாகவதர் கச்சேரி சண்முகா தியேட்டரில் நடந்தது. எதிர்பார்த்ததற்கு மேல் வசூலாயிற்று. பாகவதருக்கு ரூ.2000/-மும் எனக்கு ரூ.500/- ம் கொடுத்தார் பாதர். இன்றும் ஜெயில் ரோட்டிலுள்ள சர்ச்சில் ஒரு டவரைக் காணலாம்.
               பத்து ஆண்டுகள் ஓடி விட்டன. நாலைந்து முறை பாதர் எனக்குப் பண உதவி செய்தார்.

ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு....

எனக்கு வயது பன்னிரண்டு இருக்கும். அப்போது என் பெரியப்பா, மாமா குடும்பங்கள் நீண்ட காலத்துக்குப் பிறகு ஆந்திராவிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது சில சடங்குகள் செய்வது வழக்கம்.
       உப்பிலிபாளையத்திலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு எல்லோரும் போனோம். நல்லெண்ணெய் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் தலை குனிந்தபடி நாங்களும் அவர்களும் இருவர் இருவராக முகம் பார்த்துக் கொண்டோம். என் பெரியப்பாவிடம் சிறிது தெலுங்கு கற்றுக் கொண்டேன். தினமும் வீட்டில் விருந்து சாப்பாடு. ஒரே கலகலப்பு. வீட்டில் முன்புறம் அகன்ற திண்ணையில் அமருவார்கள் (J.M.Sons Bakery) எதிரில்.இருந்தது வீடு.
          அவர்கள் எனக்கு காயத்ரி மந்திரமும் சந்தியா வந்தனமும் சொல்லித் தந்தார்கள். ஏழெட்டு ஆண்டுகள் கோவையில் தங்கிவிட்டுப் பிறகு ஆந்திராவிற்கே போய்விட்டார்கள். இன்று அவர்களுடைய சந்ததிகள் அங்கே இருக்கிறார்கள்.
       எங்கள் வீட்டுக்குச் சற்று தூரத்தில் ஒரு பங்களாவில் திரு.டால்பி எனும் ஆங்கிலேயர் இருந்தார். அவர் வீட்டுக்கு அடிக்கடி நான் செல்வதுண்டு. அவர் எனக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தார். பட்டாணிக் கடலையும் நிறையத் தந்தார்.

பாகவதரிடமிருந்து பிரிந்து வந்தேன்...

கோவைக்கு வந்துவிட்ட என்னை மீண்டும் அழைத்தார் பாகவதர். நாங்கள் பூனாவுக்குச் சென்று, ‘பிரபாத் ஸ்டுடியோவில் ‘ராஜ முக்தி’ என்ற படம் எடுத்தோம். படம் தோல்வியடைந்தது.
            பாகவதருக்கு ஒரு ஆள் தினமும் ஒரு பாட்டிலை மறைவாக எடுத்துச் செல்வதைக் கண்ட நான் மனம் மாறினேன். அவருடன் தங்கியிருக்க விரும்பவில்லை.ஒரு நாள் பாகவதர் என்னைப் பார்த்து “உங்கள் விரலில் இருந்த வைரமோதிரம் காணவில்லையே?” என்று கேட்டார்.
             ”நாம் திருச்சியில் இருந்தபோது உங்கள் தம்பி ஒரு திருமணத்துக்குப் போகவேண்டும் என்று சொல்லி மோதிரத்தைக் கேட்டார். நான் கொடுத்தேன்.
             தவிர ஒரு நாள் பி.ஏ. தேர்வு எழுத என்னிடமிருந்த ‘sheffers pen’ கேட்டார். (அதன் விலை ரூ.210. பிளாட்டினம் நிப் உடைய தங்க நிறமுள்ள பேனா) கொடுத்தேன்” என்று நான் சொன்னேன்.
            ”நீங்கள் ஏன் திரும்பக் கேட்டுப் பெறவில்லை?” என்று கேட்டார் பாகவதர். ”அவர் கொடுக்கவில்லை. நானும் கேட்கவில்லை” என்று சொன்னேன். “நீங்கள் ஒரு சாமியாராக இருக்க வேண்டியவர்” என்றார் பாகவதர். நான் சிரித்துக் கொண்டேன்.
            சிறிது நேரம் கழித்து, நான் “என் மனைவி என்னை ஊருக்கு வரும்படி கடிதம் எழுதியிருக்கிறாள். நாளைக்கு நான் புறப்பட வேண்டும்.” என்றேன். ”சரி, புறப்படுங்கள். ஆனால் நான் உங்களுக்கு ஏதும் கொடுக்கவில்லையே. ஒரு வீடு வாங்கித் தர நினைத்தேன்” என்றார். ”பரவாயில்லை. அந்த பாக்கியம் எனக்கு இருக்குமானால், நிச்சயமாக, ஒரு நாள் எனக்குக் கிடைக்கும். உங்களுடைய நட்பு இருந்தால் அது போதும்” என்றேன்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

சராசரங்கள் வரும் சுழன்றே...

ஒரு நாள், திருச்சி பங்களாவில் இருந்த போது - பாகவதர் என்னிடம் சொல்லிக் கொண்டு தனியாகவே காரில் புறப்பட்டார். வழியில் போலிஸ் அவரைக் கைது செய்தனர். ஊர் முழுவதும் பரபரப்பு. இலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இவரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.
            நான் பாகவதரைச் சப் ஜெயிலில் சந்தித்தேன். ஒரு வக்கீலை அழைத்து வரும்படி என்னிடம் சொன்னார். மனவுறுதியுடன் காணப்பட்டார். தினமும் வீட்டிலிருந்து அல்வாவும் இட்லியும் கொண்டு வரச் சொன்னார்.
             திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின்பு இலண்டனிலுள்ள பிரிவியூ கவுன்சிலுக்கு அப்பீல் செய்தோம். 1944ல் விடுதலையானார்கள். பாகவதரின் புகழ் மங்கியது. மக்களிடையே கர்நாடக இசையின் ரசிகத்தன்மை மாறிவிட்டது.
             நான் கோவைக்கு வந்து விட்டேன். அப்போது கோவை ராஜ வீதியில் உள்ள பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தவர் திருமதி.எம்.டுவெல்ஸ் (M.DWELLS). அவர் கோவை இரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு பங்களாவில் வசித்தார். (இப்போது, அங்கு Fire Service Station உள்ளது.)
            அவருக்குத் தமிழ் கற்றுத் தரும்படி ஒருவர் என்னிடம் சொன்னார். நான் ஓராண்டு அவருக்குத் தமிழ் கற்பித்தேன். தமிழ் பேசுவதற்கும் கற்றுக் கொண்டார்.
            கோவைக்கு வந்துவிட்ட என்னை மீண்டும் அழைத்தார் பாகவதர். நாங்கள் பூனாவுக்குச் சென்று, `பிரபாத்` ஸ்டுடியோவில் `ராஜ முக்தி` என்ற படம் எடுத்தோம். படம் தோல்வி அடைந்தது.

புதன், 2 செப்டம்பர், 2009

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்பிரமணிய சுவாமி உனை மறந்தேன்...

          இரயிலில் அருகில் அமர்ந்த பாகவதரிடம், `திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையாருக்குக் கும்பாபிஷேகம் செய்தீங்களாமே! ஒரு குடம் பாலை அந்தக் கல்லின் மீது ஊற்றினீர்களாமே! அது முட்டாள்தனமில்லையா? வாசல் படியில் நாம் காலால் மிதிக்கிற கல்லைத் தூக்கி வைத்து அதைக் கடவுள் என்று சொல்வது மடத்தனம் இல்லையா?` என்றார் பெரியார்.
            `இல்லை. அது வாசப்படியில் கிடக்கும்போது, வெறும் கல்லாகவே நினைக்கிறோம். அதேக் கல்லையே கோவிலில் வைத்துக் கடவுளாக எண்ணி வணங்குகிறோம். எல்லாம் மனம்தான் காரணம்.
             இன்னொன்று சொல்கிறேன் - என் அருகில் என் மனைவியும் தங்கையும் நிற்கிறார்கள். - இருவரும் பெண்கள் - மனைவியைத் தங்கையாகவோ, தங்கையை மனைவியாகவோ நினைப்பதில்லை. அதைப் போலத்தான் கல்லை நாம் நினைப்பதைப் பொருத்தது.` என்று விளக்கினார் பாகவதர்.
            எதிர் சீட்டில் உள்ளவர்கள் `சபாஷ் பாகவதர்!` என்று சொல்லி சிரித்தார்கள். `இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது` என்றார் பெரியார். உடனே பாகவதர் வாதம் பிடிவாதமானால் விளக்கி பய்னில்லை என்று உணர்ந்து என்னைப் பார்த்து சைகை செய்தார். அதைப் புரிந்து கொண்ட நான் செக்ரட்டரியிடம் மெல்ல சொல்லி, பெட்டி படுக்கைகளை அடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்கு எடுத்துப் போகச் செய்தேன்.
           `ஐயா, எங்கள் சீட் அடுத்த கம்பார்ட்மெண்டில் உள்ளது. எனக்கு விடை கொடுங்கள்` என்றார் பாகவதர்.
         `பாகவதர், போய் வாங்கோ. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்` என்றார் பெரியார்.
          

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?

       கோவை செண்ட்ரல் ஸ்டுடியோவில் `சிவகவி` படம் முடிந்தது. `ஹரிதாஸ்` படம் தொடங்கிய போது, பாகவதரின் புகழ் தமிழ் நாடு முழுவதும் பரவியது. - காரணம் - அவரது அழகிய தோற்றமும், கந்தர்வ கான குரலும், மக்களை மயக்கியது.
        இராமனாதபுரத்தில் ஒரு பங்களாவில் தங்கியிருந்தோம். பட முதலாளியும் டைரக்டரும் பாகவதரிடம் மிக்க மரியாதை காட்டினார்கள். சென்னை H.M.V யில் பாகவதரது பாடல்கள் ஒரு கண்ணாடி அறையில் பதிவு செய்யப்பட்டன. நான் அருகிலிருந்து ரசித்தேன். அதனால் எனக்குக் கர்னாடக சங்கீதத்தில் பற்று ஏற்பட்டது.
      படம் முடியும் தறுவாயில் ஒரு நாள் நாங்கள் திருச்சிக்குப் புறப்பட்டோம். எங்கள் செக்ரட்டரி வெங்கட்ராமய்யர் கோவை ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் டிக்கெட் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.
      மாலை 6.30 மணிக்குப் புளூமெளண்ட்டன் எக்ஸ்பிரஸ் வந்தது. சிறிது நேரத்தில் இரயில் கிளம்பும் சமயம் கார்டு விசில் ஊதி, பச்சைக் கொடியைக் காட்டினார். இரயில் நகர்ந்தது. இதைக் கண்ட எங்கள் செக்ரட்டரி ஓடிப் போய் கார்டைப் பார்த்து, `சார், பாகவதர் வ்ருகிறார். கொஞ்சம் நிறுத்த முடியுமா` எனக் கேட்டார். கார்டு இரயிலை நிறுத்தி விட்டார். அத்தகைய செயல் இனி எந்தக் காலத்திலும், யாருக்காகவும் நடைபெறாது என எண்ணுகின்றேன். அந்த கார்டுக்கு பிற்காலத்தில் ஸ்டுடியோவில் ஒரு வேலை கொடுக்கச் செய்தார்.
           ஒரு நாள் நாங்கள் திருச்சிக்கு கிளம்பினோம். இரயில் ஈரோடு சந்திப்பில் நின்றது. செக்ரட்டரி பெட்டி படுக்கைகளை எடுத்துச் சென்று ஒரு 2 ஆம் வகுப்பு பெட்டியில் வைத்தார். (3 ஆம் வகுப்பில் குஷன் சீட் கிடையாது). நாங்கள் அந்த பெட்டியில் ஏறினோம். ஒரு சீட்டில் பெரியார் ஈ.வெ.ரா அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் பாகவதர் வணக்கம் செய்தார். அவர் அருகில் நாங்கள் அமர்ந்தோம்.
`வாங்கோ, பாகவதர். உக்காருங்கோ. என்னவோ கேள்விப்பட்டேன். கொஞ்ச நாளைக்கு முன்னால் நீங்கள் ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்து விட்டீர்களே!
`அப்படி நான் என்ன செய்து விட்டேன்? சொல்லுங்கோ` என்றார் பாகவதர்.

புதன், 18 மார்ச், 2009

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

என் மனைவி முத்தம்மாள் தோல் சம்பந்தமான ‘எக்ஸிமா’ நோயால் பீடிக்கப்பட்டாள். அவளுக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. பின்பு அவள் விருப்பப்படி பெங்களூரில் உள்ள பெற்றோரிடம் அனுப்பி வைத்தேன். அவளது பிள்ளைகள் சண்முகம், சுலோச்சனா, சந்திரா, என் பெற்றோர் எல்லாரும் நான் அனுப்பும் பணத்தைக் கொண்டு காட்டூரில் (தற்போது கோவை காந்திபுரத்திலுள்ள இராம் நகர் பகுதி) வாழ்ந்து வந்தனர்.
என் மனைவி முத்தம்மாளின் விருப்பத்திற்கிணங்க, என் தாயாரும், என் மனைவி முத்தம்மாளும் சேர்ந்து ஆலாங்கொம்பு சென்று, அங்கு வசிக்கும் சிற்ப வேலை செய்யும் விஸ்வநாதனுடைய மனைவியைச் சந்தித்தனர். அவர்களின் இரண்டாவது பெண் இலட்சுமியை எனக்கு இரண்டாம் தாரமாகத் தரும்படி கேட்டுச் சம்மதம் பெற்றனர். பின்பு எனக்கு கடிதம் எழுதினார்கள். நான் சரியென்று கடிதம் மனைவிக்கு எழுதினேன். திருமணம் பேருர் கோவிலில் வைத்துக் கொள்ளும்படியும், தேதி குறிப்பிட்டு எனக்கு எழுதும்படியும் நான் கடிதம் எழுதினேன்.
குறிப்பிட்ட நாளில் எனக்கும் இலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பாகவதரும் நண்பர்களும் வந்தார்கள். சில நாட்கள் நான் கோவையில் தங்கிவிட்டு சென்னைக்குத் திரும்பி விட்டேன்.
இலட்சுமியின் உயர்ந்த குணங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். பொறுமை, குடும்பத்தின் மீது பாசம். இந்த இரு குணங்களும் இலட்சுமியிடம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அது மட்டுமல்ல, எனக்கு தக்க சமயத்தில் நல்ல யோசனை கூறும் மந்திரியாகவும், எனக்கு பணிவிடை செய்வதில் அடிமையைப் போலவும், என் குற்றங்களை மன்னிப்பதில் பூமாதேவியாகவும் விளங்கினாள்.
என் பெற்றோரையும், முதல் மனைவியையும், மூன்று பிள்ளைகளையும் அன்புடன் கவனித்துக் கொண்ட அவளது பெருமையைப் பற்றிச் சொல்வது என்றால் - நான் கொடுத்து வைத்தவன் - அவ்வளவுதான்.

செவ்வாய், 17 மார்ச், 2009

”இராஜன் மகாராஜன்”

தியாகராஜ பாகவதர் காலையில் எழுந்த பின், பன்னீர் கலந்த தண்ணீரில் குளித்து விட்டு, பட்டாடைகள் அணிந்து, வைரக் கடுக்கண், கழுத்தில் வைரம் பதித்த சங்கிலி, நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு, கை விரல்களில் ஆறு வைர மோதிரங்கள், ஷர்ட் பொத்தான்களும், cufflinksகளும் வைரங்கள் மின்ன அணிந்து கொள்வார்.
இத்தனை அலங்காரங்களுக்குமேல் வாசனைத் திரவியங்கள் சட்டையில் தெளித்துக் கொண்டு, சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட நாற்காலியில் வெளியே முன்கூடத்தில் அமருவார். என்னையும் அருகில் அமரச் செய்வார். அவரது நண்பர்கள் மூவர் தினமும் அங்கே வந்து போவார்கள்.
எனக்கு ஒரு வைர மோதிரமும், பட்டு சட்டையும் ஜரிகை வேட்டியும் தந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் உண்ட உணவு வகைகள் --------
அவருக்குத் தங்கத் தட்டு. எனக்கும் அவரது நண்பர்களுக்கும் வாழையிலை.
மூன்று வகை இனிப்பு, மூன்று வகை சாதம், மூன்று வகைப் பொரியல், மூன்று வகைப் பாயாசம், மூன்று வகை ரசம், மூன்று வகைக் குழம்பு - தயிர் மட்டும் ஒரே வகை !
இவற்றைக் கண்ட நான் பிரமித்துப் போனேன். நான் தேவலோகத்தில் இருப்பதாக ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது.
இந்த இருபதாம் நூற்றாண்டில் எந்த ஒரு அரசனும் அனுபவிக்காத சுகபோகத்தை அனுபவித்தவர் பாகவதர் ஒருவரே.
ஒரு அதிசயமான செய்தி - நான் அவருடன் தங்கியிருந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறைகூட அவர் தமது தலைமுடியை வெட்டிக் கொண்டதில்லை - காரணம் தலைமயிர் வளர வளர நுனியில் தேய்ந்து விட்டது. அவர் காலத்தில் இளைஞர்கள் ‘பாகவதர் கிராப்’ என்று சொல்லி கொண்டு தாங்களும் வைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
அப்போது என் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு துயரச் செய்தியைப் பற்றி அடுத்த இடுகையில்.

செவ்வாய், 10 மார்ச், 2009

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ? - தியாகராஜ பாகவதர்

ஒரு நாள். ஆம், அந்த ஒரு நாள். நான் காட்டூரிலிருந்து காமாட்சியம்மன் கோவிலுக்குப் பெரியகடைவீதி வழியே போய்க்கொண்டிருந்தபோது, நகைக் கடையிலிருந்து வெளியே வந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார் திரு. மீனாட்சி சுந்தரம்.
“ஐயா, நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அதாவது, என் நண்பர் திரு. தியாகராஜ பாகவதருக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும். அவர் பங்களா இராமனாதபுரத்தில் இருக்கிறது. நீங்கள் வர முடியுமா?” என்று கேட்டார். நான் சரியென ஒப்புக் கொண்டேன்.
மறு நாள் அந்த நண்பருடன் பாகவதர் பங்களாவுக்குச் சென்றேன். அவர் என்னைப் பார்த்து வணக்கம் செய்தார். எனக்கு வயது 33. என் தோற்றம், பேச்சு அவரைக் கவர்ந்துவிட்டன. இரவு 10மணி முதல் 12வரை டியூஷன் வகுப்பு நடந்தது. இரவில் அங்கு தங்கிவிட்டுக் காலையில் அவருடைய காரில் வீட்டுக்குத் திரும்புவேன்.
ஒரு நாள் பாகவதர் சொன்னார் - “ஐயா, நீங்கள் என்னிடம் தங்கிவிடுங்கள். நான் அடிக்கடி திருச்சிக்கும் சென்னைக்கும் போகவேண்டியிருப்பதால் என்கூடவே நீங்கள் வருவதை விரும்புகிறேன். பள்ளி வேலையை விட்டுவிடுங்கள்” என்றார். நான் முடியாது என மறுத்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் என்னை வற்புறுத்தியதால், நான் முனிசிபல் கமிஷனரை அணுகி எல்லா விவரங்களையும் சொன்னேன். அவர் சொன்னார் - “உங்களுக்கு 5ஆண்டுகள் லீவ் தருகிறேன். நீங்கள் பள்ளியில் 36ரூபாய் வாங்குகிறீர்கள். பாகவதரிடம் 125ரூபாய் வாங்குவதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றேன். இராஜினாமா செய்ய வேண்டாம்” என்றார்.
நூறு ரூபாய் நோட்டை முதன்முதலில் பாகவதர் எனக்குக் கொடுத்தபோதுதான் பார்த்தேன். விரைவில் ஒரு முடிவுக்கு வந்தேன். குடும்பத்தின் வறுமை நிலையை போக்குவதற்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். பள்ளி வேலையை விட்டுவிட எண்ணி இராஜினாமா செய்து பாகவதரின் வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டேன்.
அவருக்கு இரவில் டியூஷன். பகலில் அவருடைய (பி.ஏ) உதவியாளர் ஆக இருந்தேன். 15 நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் போய்வருவேன்.
திருச்சியில் பாகவதருடைய பங்களா பிரமாண்டமாக இருந்தது. அவரது வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். அதைப் பற்றி அடுத்த இடுகையில்...

திங்கள், 9 மார்ச், 2009

திருமணம்

என் முதல் திருமணம் ஆம்பூரில் நடந்தது. கோவையிலிருந்து ஆம்பூருக்கு இரயில் கட்டணம் 3ரூபாய். சென்னைக்கு 5ரூபாய். ஜோலார்பேட்டையிலிருந்து நான்காவது இரயில் நிலையம்தான் ஆம்பூர்.
1931ல் திருமணம் - 5 நாட்கள் - (மாப்பிள்ளை அழைப்பு, தாராமுகூர்த்தம் , ஒளபாசனம், பாங்குனி முகூர்த்தம், நாகவல்லி) அப்போது என் வயது 22. 1932ல் அதாவது என் 23வது வயதில் நான் குடுமி எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக் கொண்டேன். பின்பு வேலை தேடத் தொடங்கினேன்.
என் ஆசிரியர் பயிற்சியைக் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளில் முடித்தேன். அங்கு நடைபெற்ற ஒரு ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அது இன்றும் என்னிடம் உள்ளது. சர்ட்பிகேட் தொலைந்து போயிற்று.
பின்பு ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினேன். பாப்ப நாயக்கன்பாளையம் முனிசிபல் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினேன். மாதம் ரூ.18. பின்பு ஜெயில்ரோட்டிலிலுள்ள முனிசிபல் பள்ளியில் பணியாற்றிய காலத்தில் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அது என் பொற்காலம். அது என்ன? அடுத்த இடுகையில்...

வியாழன், 5 மார்ச், 2009

அழகிய கையெழுத்துக்குக் காரணம்

எனது பள்ளிப் படிப்பைக் கோவை இலண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தேன். (இன்று அது சி.எஸ்.ஐ என்று அழைக்கப் படுகிறது.) அப்போது பள்ளியின் பிரின்ஸிபால் திரு. 'H.W.NEWWELL' இருந்தார். அவரது சிரித்த முகம் இன்றும் என் நினைவில் இருக்கிறது.
அது மட்டுமல்ல, அப்பள்ளியாசிரியர்கள் அனைவரும் என் நினைவில் இருக்கிறார்கள். அவர்கள் கற்பித்த முறை, நடந்து கொண்ட விதம் இவற்றை நினைக்கும் போதெல்லாம் உள்ளத்தில் ஒரு விதமான இன்பம் உண்டாகுகிறது. குறிப்பாக, 6ஆம் வகுப்பு ஆசிரியர் திரு. டி.வி.மதுரம் என்பவர் பாடம் நடத்தும்போது, கதைகள் சொல்வார். மேலும், எனது அழகிய கையெழுத்திற்கும் அவர்தான் காரணம். கையெழுத்துக்காகவும் பைபிள் தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றதற்காகவும் எனக்குப் பலமுறை பரிசுகள் (பென்சில்கள், ரப்பர், புத்தகம்) கொடுத்து ஊக்குவித்தார். அவரை நான் மறக்க முடியுமா?
நான் III FORM படித்தபோது (8ஆம் வகுப்பு) ஆங்கிலப் புத்தகத்தில் படித்த ஒரு பாடம் “ நீதிபதியின் கடன்” (வேக், நிகொலஸ் கதை) மாணவர்களை அழ வைத்தது. அக்கதையை நான் எனது பள்ளி மாணவர்களுக்குச் சொல்லிக் கண்ணீர் சிந்தும்படி செய்திருக்கிறேன்.
என் நண்பர்களுடன் அருகிலிருந்த போலீஸ் மைதானத்தில் ‘புட் பால்’ விளையாடுவதுண்டு. அந்த நாட்கள் இனிமையானவை. என் தந்தை என்னிடம் 1 ரூபாய் கொடுத்து, கோனியம்மன் கோவில் எதிரிலிருந்த அரிசிக் கடையில் அரிசி வாங்கி வரச் சொல்வார். 12படி அரிசி கிடைக்கும். (7கிலோ) அதை ஒரு பெரிய துண்டில் கட்டிக் கொடுப்பார் கடைக்கார அய்யர். நான் தலைமீது வைத்துக் கொண்டு வீடு திரும்புவேன். எனக்கு 3காசு கிடைக்கும் (1ரூபாய்க்கு 16அணா = 192பைசா).
என் தோற்றம் வேடிக்கையாக இருக்கும். சிரிக்க வேண்டாம் - இடுப்பில் வேட்டி, உடம்பில் சரட்டு, அதன்மேல் ஓப்பன் கோட்டு, தலைமயிர் பின்னி சடை போட்டுவிடுவார் என் தாயார். அப்பாவை ‘ஐயா’ என்று அழைப்பேன். இந்து மாணவர்கள் கிராப் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தலையில் வட்டமான தொப்பி அணிய வேண்டுமென்பது சட்டம். அது ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம்.

செவ்வாய், 3 மார்ச், 2009

காலந் தவறாமை

இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அத்துடன் கோவையில் பரவிய கொடிய நோயும் ஓடிவிட்டது. நாங்கள் மீண்டும் உப்பிலிபாளையம் வந்து சேர்ந்தோம். அருகில் ஆடிஸ் வீதியில் உள்ள அந்தோணியார் பள்ளியில் என்னைச் சேர்த்தார்கள். ’அறிவிலி’ வகுப்பில் ஆறு மாதம் படித்த பின் முதல் வகுப்புக்கு என்னை மாற்றினார்கள். (ஏழு வயது). ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஆங்கிலப் புத்தகத்தில் இருந்த ஒரு பாடம் - லேட் லத்தீப் என்பதை ஆசிரியர் கற்றுக் கொடுத்தார். லத்தீப் என்ற பையன் தினமும் நேரம் கழித்தே இரயிலுக்குச் சென்று இரயிலைத் தவற விட்டுப் பின் எவ்வாறு துன்பத்தையடைந்தான் என்பது என் உள்ளத்தில் வேருன்றி விட்டது.
அன்று முதல் இன்று வரை எங்கு போவதானாலும் சிறிது நேரத்துக்கு முன் அந்த இடத்துக்குப் போய்விடுவேன். ஒரு நாள் கூட நேரம் கழித்து எங்கும் போனதில்லை - சொல்லப் போனால், ஆங்கிலேயர் நமக்குக் கொடுத்து விட்டுப் போன நல்லப் பழக்கங்களில் ஒன்று, “காலம் தவறாமை” - (punctuality). அதை நாம் மறுக்க முடியாது.

திங்கள், 2 மார்ச், 2009

நடை பழக்கம்

அந்தக் கிராமம் வெற்றிலைத் தோட்டங்கள் நிறைந்த அழகான பகுதியாக இருந்தது. தோட்டத்தின் அருகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் எப்போதும் ஓடிக் கொண்டேயிருக்கும். ஆழமில்லை. அதனால் நான் தினமும் வாய்க்காலில் குளித்து விட்டு, என் வேட்டியைத் துவைத்து எடுத்துக் கொண்டு, உடுத்தியுள்ள ஈர வேட்டியுடன் வீட்டுக்குப் போய் அதை வேறு ஒரு துண்டால் சுற்றி வைப்பேன். அப்போதுதான் மறுநாள் அந்த வேட்டியில் காவி நிறம் உண்டாகும். தேவர் உடுத்தியிருப்பதைப் போல நான் காவி வேட்டியைப் பெருமையாக உடுத்திக் கொள்வேன். வாய்க்கால் கரையில் உள்ள பிள்ளையாருக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, அருகம்புல்லைத் தலை மீது வைத்துக் கும்பிட்டு விட்டு வீட்டுக்கு வருவேன்.
அப்போது என் வயது 5. வீட்டுக்குச் சென்றதும் என் தாயார் வெண்கல வட்டிலில் சிறிதளவு சோளக்களியை வைத்து தண்ணீரை ஊற்றி, அருகில் உலித்த வெங்காயமும் வைப்பார்கள். நான் அதை உண்ட பின் சிறிது நேரம் வெளியே சுற்றி விட்டு வந்து, பிறகு அம்மாவிடம் பால் குடிப்பேன். அந்தப் பழக்கம் என் 5வயது முடியும் வரை இருந்தது.
திரு. நஞ்சப்பத் தேவர் என்னை அதிகமாக நேசித்தார். என் பெற்றோர் என்னை மிகவும் செல்லமாக வளர்ந்தார். தேவர் என்னை அடிக்கடி வெற்றிலைத் தோட்டத்திற்கு அழைத்துப் போவதுண்டு. கொடிக் காலுக்குத் தண்ணீரில் நடந்துதான் போக வேண்டும். அது ஒரு சுகமான அனுபவம்.
அங்கு நாங்கள் உண்பது சோளம், ராகி, கம்பு, தினை ஆகிய தானியங்கள் மட்டும். பண்டிகை நாட்களில் அரிசிச் சோறு. வாழையிலை அதிகமாகக் கிடைக்காது. தையல் இலையில் மட்டும் பெற்றோர் உண்பார்கள். தினமும் கேழ்வரகுக் கழியை என் தட்டில் வைத்து, அதன் மத்தியில் குழி செய்து அதில் நெய் ஊற்றி, பனை வெல்லம் பொடி செய்து போட்டு என்னை உண்ண வைப்பார்கள். சில நாட்களில் கழியை மோருடன் கலந்து கரைத்துக் குடிப்போம்.
என் அக்காவைத் திருப்பூர் அனுப்பர்பாளையத்திலிருந்த தாய்மாமனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். என் தகப்பனார் வாரம் ஒரு முறையேனும் கோவைக்குச் செல்வதுண்டு. அப்போது என்னையும் அழைத்துப் போவார். நாங்கள் 7மைல் தூரம் நடந்தே கோவைக்கு வந்துவிட்டு, 7மைல் தூரம் நடந்தே வீட்டுக்குப் போய் விடுவோம்.
இந்த நடைப் பழக்கம் இன்று வரை இருக்கிறது. என் உடல் நலத்துக்குத் துணையாக இருப்பது எனது நடைதான் 85வயதுக்குப் பின் நடை தளர்ச்சியடைந்தது.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

அத்தியாயம் - ௧ - கோவையைத் தாக்கிய பூதம் !

கோவையை அடுத்துள்ளது திருப்பூர். அதைச் சேர்ந்த பகுதி அனுப்பர்பாளையம். அங்கு பித்தளை, செம்பு பாத்திரங்கள் செய்யும் குடும்பங்கள் வாழ்கின்றன.
என் பாட்டனார் திரு. பழனியப்பன் என்பவரும் பாத்திரங்கள் செய்யும் தொழிலாளியாக வாழ்ந்தார். என் பாட்டியின் பெயர் தாயம்மாள். இவர்களுக்குப் பிறந்த எட்டுக்குழந்தைகளில் மூத்த பெண் கன்னியம்மாள்தான் என் தாய். என் தாயார் திருக்குறளும் நைடதமும் ( நளன் - தமயந்தி கதை) நன்கு கற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நைடதம் நூலை இன்று வீரராகவனிடம் தந்து விட்டேன்.
கோவையின் மேற்குப் பகுதியில் உள்ள வேடப்பட்டியில் திரு. மருதாசலன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது இரண்டாவது மகனாகிய் திரு. வீரப்பன் என்பவர்தான் என் தந்தை.
அங்கு நள நாடகம் எனும் கதையை பொம்மலாட்டம் மூலம் மக்களுக்கு காட்டி வந்தார். அவருடைய முன்னோர்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.
இங்கு ஒன்று சொல்ல வேண்டும்
என் பாட்டனார் திரு.மருதாசலம் என்பவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர் - முதல் மனைவியின் பிள்ளைகள் ஆந்திராவிலுள்ள க்ர்னூலுக்கும் ( நந்தியால் கிராமம்) கடப்பைக்கும் (ஆதோனி கிராமம்) சென்று விட்டனர்.
இரண்டாவது மனைவியின் பிள்ளைகள் இருவர் கோவை உப்பிலிபாளையத்திலும் ஒருவர் வேடப்பட்டியிலும் தங்கி விட்டனர். வேடப்பட்டியில் தங்கியவருக்கு, என் தந்தை சின்னத்தம்பி (எ) வீரப்பன், பெரிய தந்தை பெரிய தம்பி என்பவரும் தங்களுக்கு சொந்தமான வயலை விற்றார்கள். இவர்கள் இருவர் மட்டும் உப்பிலிபாளையத்தில் தங்கிவிட்டனர்.
மூன்றாவது மனைவியின் பிள்ளைகள் வைத்தியர் வீராசாமி என்பவரும் இராமசாமி என்பவரும் மைசூருக்குப் போய்விட்டனர்.
உப்பிலிபாளைய்த்தில் தங்கிவிட்ட சின்னத் தம்பியும் பெரியதம்பியும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.
எனது பெற்றோர் திரு. வீரப்பன், கன்னியம்மாள் ஆகியோருக்குப் பிறந்த பிள்ளைகள் - மாரியாயம்மாள், சுப்பிரமணியன் ( நான்) , அங்கம்மாள் ஆகிய மூவர். நான் பிறந்தது திருப்பூர். வளர்ந்தது கோவை. 1914 ல் கோவையில் தோன்றிய பிளேக் எனும் பயங்கர நோய் மக்களைச் சிதறியோடச் செய்து விட்டது.
என் பெற்றோர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒண்டிப்புதூருக்கு அடுத்துள்ள ஒட்டர்பாளையத்திற்குப் போனார்கள். அங்கே திரு. நஞ்சப்பத் தேவருடைய வீட்டில் வசித்தோம். வீட்டுக்கு வாடகை இல்லை.
அங்கு என் வேட்டியில் காவி நிறத்தை ஏற்படுத்திக் கொண்டேன். எவ்வாறு காவி நிறம் ஏற்பட்ட்து. ஏன் ஏற்படுத்திக் கொண்டேன் என்கிற விவரம் அடுத்த இடுகையில்

எந்தையின் சுயசரிதை

என் தந்தையின் சுயசரிதையிலிருந்தும், என்னிடம் வாய்மொழியாக உரைத்தவற்றிலிருந்து எழுதுகிறேன். (என்னுடைய கருத்துக்களும், என்னுடைய எழுத்துக்களும் அடைப்பு குறியில் குறிப்பிடுகிறேன் - மற்றவை என் தந்தையின் சுயசரிதையிலிருந்து - எனவே, அவரே எழுதுவது போல் அமைந்திருக்கும்)
இந்த சுயசரிதையை அவர் எழுதும் போது அவர் வயது எண்பத்தியேழு (87)
முன்னுரை
நம் பாரத நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு ஒரு சமயம் கூறிய சில வாக்கியங்கள் இங்கு குறிப்பிடுதல் அவசியம் எனக் கருதுகிறேன்.
“ நாட்டின் பெரிய, சமூக, அரசியல், ஆன்மீகத் தலைவர்களின் ஒப்பற்ற வாழ்க்கைக் குறிப்புக்கள் எல்லாம் நம்மைச் சிந்திக்க வைப்பதுடன் அவற்றைப் பின்பற்றவும் செய்கின்றன. நாம் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது, நமக்குப் பின்னால் காலம் எனும் மணலில் நம் அடிச்சுவடுகளைப் பதிய வைத்துக் கொண்டே போய்விடுகிறோம் இறுதியில்”
இந்த வாக்கியங்கள் அடிக்கடி என் நினைவில் தோன்றுவதுண்டு. எனவே, என் நினைவு அலைகளில் கிடைத்த வாழ்க்கைக் குறிப்புகளை இயன்றவரை இங்கு எழுதுகிறேன். குறிப்புகள் வரிசைப்படி இல்லை. காரணம் - என் 87-ஆம் வயதில் நினைவாற்றல் குறைந்துள்ளது.
இதை எழுதுமாறு என் அன்பு மக்கள் இரவிச் சந்திரனும் வீரராகவனும் என்னைத் தூண்டினார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் தந்தையைப் பற்றி எளிய அறிமுகம்

என் தந்தை பெயர் திரு.தி.வி.சுப்பிரமணியம்.
தலைமை ஆசிரியராக கோவை அனுப்பர்பாளையம் துவக்க பள்ளியிலும், தமிழ் ஆசிரியராக தூய மைக்கேல் மேல் நிலைப் பள்ளியிலும் பணியாற்றினார்.
தியாகராஜ பாகவதருக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தார்.
பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள புரவிபாளையம், ஊத்துக்குளி ஜமீந்தாரர்களுக்கு தமிழ் இலக்கிய நயத்தை எடுத்து உரைத்து ஆர்வத்தை தூண்டினார்.
தொண்ணூறு வயதிற்கு மேல் வாழ்ந்தார்.
சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகளில் சில.
௧) தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தான் முதன்முதலாக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் நாட்டு நடப்பை அறிந்து கொள்வது அவசியம் எனக் கருதி அறிவிப்பு பலகையில் அன்றைய செய்திகளை எழுதி வந்தார். தற்போது அனைத்து பள்ளிகளிலும் இது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
௨) கோவை புலியகுளத்தில் பாமர மக்கள் அறிந்து பயன் பெற இலவசமாக திருக்குறள் வகுப்பு நடத்தியதை பாராட்டும் வகையில் அவருக்கு எடைக்கு எடை நெல் தரப்பட்டது.
௩) தூய மைக்கேல் பள்ளியில் இறை வணக்கத்தை தமிழில் மொழி பெயர்த்தார்.
(வெகு காலமாக இதனை பள்ளியில் பாடி வந்தனர் - தற்போது மாற்றப் பட்டுவிட்டது.)
௪) பேருர் கனகசபையிலிருப்பதைப் போன்று சாக்பீசால் சங்கிலி செய்தார்.
மேலும் பலவற்றைப் பற்றி எழுத உள்ளேன். வாசிப்பவர்களுக்கு மேலும் விவரம் தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.